பதிவு செய்த நாள்
04
ஜூலை
2020
11:07
ஈரோடு: கோட்டை கஸ்தூரி அரங்கநாதருக்கு, தைலக்காப்பு செய்யப்பட்டது. இனி, 48 நாட்களுக்கு மூலவரின் முழு தரிசனம் கிடைக்காது. ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலின் மூலவர் சிலை, சுதை மண்ணாலானது. இதற்கு அபிஷேகம் கிடையாது. ஆண்டுக்கு ஒருமுறை தைலக்காப்பு மட்டும் செய்யப்படுகிறது. ஆனி கேட்டை நட்சத்திரமான நேற்று, தைலக்காப்பு செய்யப்பட்டது. முன்னதாக அதிகாலையில் திருப்பல்லாண்டு, திருப்பள்ளியெழுச்சி, சிறப்பு ஹோமம் நடந்தது. இதையடுத்து உற்சவருக்கு திருமஞ்சனம், மூலவருக்கு தைலம் சாற்றுமறை செய்தல் நடந்தது. தொடர்ந்து திருவாராதனம், சாற்றுமுறை, ஸ்ரீதேவி, பூதேவி சமேத கஸ்தூரி அரங்கநாதர் மூலஸ்தானம் சேர்தல் நடந்தது. மூலவருக்கு தைலக்காப்பு செய்யப்பட்டுள்ளதால், 48 நாட்கள் அதன் கதகதப்பில் இருப்பார். இதனால், 48 நாட்களும் மூலவரின் பாதம் மற்றும் சிரசு மட்டுமே தரிசிக்க முடியும். முழு திருமேனியை தரிசிக்க முடியாது. பட்டு திரையால் மூலவர் திருமேனி மறைக்கப்பட்டுள்ளது. இதனால், மூலவர் சன்னதியில் இருந்து, 48 நாட்களுக்கு உற்சவர் அருள் பாலிப்பார்.