ஆத்தூர்: ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில், ஆத்தூர், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா பகுதிகளில், வழிபாடு முறை குறித்து, ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
அதில், ஆர்.டி.ஓ., துரை தலைமை வகித்து பேசியதாவது: முகக் கவசம் இருந்தால் மட்டும் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும். எந்த இடத்திலும் எச்சில் துப்பக்கூடாது. நுழைவாயிலில் கை கழுவும் வசதி, உடல் வெப்பத்தை பரிசோதிக்கும் கருவி வைக்கப்பட வேண்டும். தொற்று அறிகுறி இல்லாதவர்களை மட்டும், வழிபாட்டு தலங்களுக்கு அனுமதிக்க வேண்டும். சிலைகள், புனித நூல்களை தொட அனுமதியில்லை. மத வழிபாட்டில் ஐந்து பேருக்கு மேல் இருக்க கூடாது. குழுவாக பாடக்கூடாது. பிரசாதம் கொடுப்பது, புனிதநீர் தெளிப்பது கூடாது. உணவு தயாரிக்கும்போது சமூக இடைவெளி வேண்டும். அன்னதானம் பொட்டலமாக வழங்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் அவசியம். ஹிந்து கோவில்களில், 100 சதுர மீட்டர் பரப்பளவில், 20 வாகனங்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது. தேங்காய், பழம், பூக்களுக்கு அனுமதியில்லை. அங்கபிரதட்சணம், சிலை ஊர்வலம், பஜனை, இசை நிகழ்ச்சியும் கூடாது. தெப்பக்குளத்தில் இறங்க அனுமதியில்லை. திருமணம் நடத்தினால், 50 பேருக்கு மேல் இருக்கக்கூடாது. இஸ்லாமியர், வீடுகளில் தொழுகை செய்யலாம். மசூதிக்கு வருபவர், சொந்தமாக பாய் கொண்டுவர வேண்டும். கை குலுக்கல், கட்டி பிடித்தல் கூடாது. இவற்றை கோவில் நிர்வாக குழுவினர் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.