பதிவு செய்த நாள்
05
ஜூலை
2020
02:07
திருப்பதி : திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள், 17 பேருக்கு, கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது, என, அறங்காவலர் குழு தலைவர், சுப்பாரெட்டி கூறினார். இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆந்திர மாநிலத்திலும் நோய் பாதிப்பு குறித்தும், கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளிலும் மாநில அரசு ஈடுபட்டு வருகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனத்திற்கு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆன்லைனில் முன்பதிவு செய்து விட்டு வரவேண்டும் என முன்பு தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அதன்படி, திமந்தோறும் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருமலையின் அன்னமய்ய பவனில், நேற்று காலை அவசர அறங்காவலர் குழு கூட்டம், காணொலி காட்சி வாயிலாக நடந்தது. அதில், அறங்காவலர் குழு தலைவர், சுப்பாரெட்டி கூறியதாவது: திருமலையில், ஏழுமலையான் தரிசனம் ஜூன், 8ம் தேதி துவங்கப்பட்டது. திருமலைக்கு வந்து தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், திருமலையில் பணிபுரியும் பாதுகாப்பு ஊழியர்கள், அர்ச்சகர்கள் என, 17 பேருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில், தரமான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. தேவஸ்தானத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும், கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. தினசரி, 12 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையான தரிசித்து வருகின்றனர். தற்போதைய சூழ்நிலையில், பக்தர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் எண்ணம் இல்லை. வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள், அம்மாநில அனுமதியை, முறையாக பெற்று பச்சை மண்டல பகுதிகளிலிருந்து மட்டுமே, ஏழுமலையான் தரிசனத்திற்கு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.