ஈரோடு: சமூக இடைவெளியை கடைப் பிடிக்க முடியாத காரணத்தால் கோவில் அன்னதான திட்டம் இடமாற்றம் செய்யப்பட்டது. ஈரோட்டில் பெரியமாரியம்மன், கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர், திண்டல் முருகன், பார்க் ஆஞ்சநேயர் கோவில், கடை வீதி கொங்கலம்மன் உள்ளிட்ட கோவில்களில் அன்னதான திட்டம் செயல்பட்டு வருகிறது.
கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக கோவில்கள் நடை அடைக்கப்பட்டுள்ளது. அதனால் அனைத்து கோவில்களிலும் பார்சல் மூலம் கலவை சாதம் அன்னதானம் வழங்கப் படுகிறது. இதில், ஈரோடு மணிக்கூண்டு மார்க்கெட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ள கொங்கலம்மன் கோவில் பகுதியில், பொதுமக்கள் வரிசையில் நின்று அன்னதானம் பெற இடமில்லை. இதனால் இங்கு சமூக இடைவெளி கடைப்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பார்சலில் வழங்கும் அன்னதானம் அங்கிருந்து, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது. கொரோனா தொற்று ஏற்படாமல் மக்களை பாதுகாக்கும் வகையில் கொங்கலம்மன் கோவில் அன்னதானம், கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவில் வளாகத்தில் வைத்து வழங்கப்படுகிறது என, கோவில் பணியாளர்கள் கூறினர்.