புதுச்சேரி : விநாயகர் சதுர்த்தி விழாவின்போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ஸ்மிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது, வண்ணம் தீட்டிய பெரிய சிலைகளை நீர்நிலைகளில் மூழ்க வைப்பதால் நீர் நிலைகள் மாசு அடைகிறது. இது தொடர்பாக விரிவான நெறிமுறைகளை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வகுத்துள்ளது.இதை https://dste.py.gov.in/Guideline_for Idol-Imersion.pdf. என்ற இணையதளத்தில் அறியலாம்.வண்ணம் தீட்டாத, களிமண்ணால் செய்த சிறிய விநாயகர் சிலையை வழிபாட்டிற்கு பயன்படுத்தலாம். விஷத்தன்மையுடைய, அழியாத ரசாயன சாயம் பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.சிலையை மூழ்க வைக்கும் இடங்களில் குப்பைகளை எரிப்பதை தவிர்க்க வேண்டும். சிலையை கடலில் மூழ்க வைப்பதற்கு புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுவிடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.காவல் துறை மற்றும் உள்ளாட்சித் துறை வழங்கும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். நீர் நிலைகளை மாசுபடாமல் பாதுகாக்க, சுற்றுச்சூழலை மேம்படுத்த இந்த நெறிமுறைகளை பின்பற்றி ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.