திருப்பதி: திருமலையில் ஏழுமலையான் தரிசன டிக்கெட் முன்பதிவில் போலி இணையதளங்கள் செயல்பட்டு வருவதால் பக்தர்கள் உஷாராக இருக்க வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலையில் ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் இணையதள முன்பதிவு வழியாக அளித்து வருகிறது. இதற்காக தேவஸ்தானம் tirupathibalaji.ap.gov.in என்ற இணையதளத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் தரிசன டிக்கெட் வாடகை அறைகள் உள்ளிட்ட சேவைகளை தேவஸ்தானம் வழங்கி வருகிறது.
இந்நிலையில் ஏழுமலையான் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்வதில் பல போலி இணையதளங்கள் செயல்பட்டு வருவதாக தெரிந்தது. இதையடுத்து தேவஸ்தான கண்காணிப்பு அலுவலர்கள் 20க்கும் மேற்பட்ட போலி இணையதளங்களை கண்டறிந்தனர். இதுகுறித்து திருப்பதி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் போலி இணையதள செயல்பாட்டாளர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து பக்தர்கள் தேவஸ்தானத்திற்குரிய இணையதளத்தில் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஆய்வு: ஆந்திர மாநில அறநிலைத்துறை அமைச்சர் சீனிவாஸ் நேற்று காலை ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின் திருமலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தேவஸ்தானம் மேற்கொண்டுள்ள சுகாதார பணிகளை பார்வையிட்டார். பின் அவர் கூறியதாவது: நாட்டில் உள்ள கோவில்களில் எங்கும் இல்லாத விதம் திருமலையில் சுகாதாரம் பேணப்பட்டு வருகிறது. மத்திய மாநில அரசுகளின் உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின் படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. முடி காணிக்கை செலுத்தும் பகுதிகள் அன்னதான கூடம் வாடகை அறை உள்ளிட்ட இடங்களை இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை கிருமிநாசினி திரவத்தால் சுத்தப்படுத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.