சூரியனின் புதல்வரான சனீஸ்வர மூர்த்தி தம் பெற்றோர்களுக்குப் பாத பூஜை ஆற்றும் திருநாளே ஞாயிறு, சப்தமியும் கூடும் நாள். தினமும் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் பிரபஞ்சத்தை வலம் வரும் சூரியத் தேரை ஓட்டுகின்ற அருணன் ஞாயிறும் சப்தமியும் கூடும் பானுசப்தமி நாளில் அருணோதய சக்திகளைச் சூரிய சக்தித் திரவியங்களாக நிரவுகின்றார். சனீஸ்வர மூர்த்தி ஈஸ்வரப் பட்டம் பெற்றவுடன், சர்வேஸ்வரனை வணங்கியவுடன், தமக்கு ஆசிகள் அளித்த பெற்றோர்களான சாயா தேவி சமேத சூர்ய மூர்த்தியைச் சாஷ்டங்கமாக வீழ்ந்து வணங்கிப் பூஜிக்கின்ற திதியே பானு சப்தமித் திதி.
பானு சப்தமி தினம் தவறாமல் சூரிய வழிபாடு செய்ய வேண்டிய நாள். இந்த நாளில் பித்ரு தர்ப்பணம் செய்வது சூரிய கிரகணம் முடிந்த பிறகு செய்யும் தர்ப்பணத்துக்கு ஒப்பானது. இந்த தினத்தில் பித்ரு தர்ப்பணம் செய்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். நதி தீரத்தில் நீராடி சூரிய வழிபாடு செய்தல், தானம் செய்தல் ஆகியவை பல்வேறு நலன்களைக் கொண்டு வரும். மற்ற தினங்களில் செய்யும் தான தர்மங்களை விடவும் இந்த தினத்தில் செய்யும் தானத்துக்கு ஆயிரம் மடங்கு பலன் கிடைக்கும். பானுசப்தமியில் சூரியனை வணங்குவோருக்கு கண் நோய்கள், இருதய நோய்கள் , மஞ்சள் காமாலை ஆகியநோய்கள் நீங்கும். ஏழரை சனி, ஜென்ம சனி, அஷ்டம சனி ஆகியன உள்ளோரும், சூரிய திசை, சூரிய புத்தியால் ஏற்படும் தோஷங்கள் நிவர்த்தியாகும். நவக்கிரக தோஷங்கள் உடையோரும் சூரிய பகவானை வழிபட்டால் நன்மை பயக்கும்.