பந்தம், பாசங்களில் விடுபட்ட உண்மைத் துறவியான மகாசுவாமிகளைத் தரிசிக்க வந்தார் பக்தர் ஒருவர். ‘‘சுவாமி! என் மனம் பந்த பாசங்களில் சிக்கித் தவிக்கிறது. துறவிகளுக்குத் தான் பந்த பாசத்தைத் துறக்க முடியும் போலிருக்கிறது. என்னைப் போன்றவர்கள் அவற்றை விட முடியாதா?’’ எனக் கேட்டார். ‘‘துறவு என்பது துறவிகளுக்கு மட்டும் உரியது அல்ல. மனிதராக பிறந்த அனைவருக்கும் உரியதுதான். பிரம்மச்சர்யம், கிரகஸ்தம், வானப்பிரஸ்தம், சன்னியாசம் என வாழ்க்கையின் படிநிலைகளை நான்காக வகுத்துள்ளது இந்து மதம். துறவியர் பிரம்மச்சரிய நிலையிலிருந்து நேரடியாக சன்னியாச நிலைக்கு வருகிறார்கள். சில துறவிகள் இல்லறத்தில் சிலகாலம் இருந்து விட்டு பின்னர் சன்னியாசி ஆவதும் உண்டு. ஆனால் எல்லா மனிதர்களும் ஒருகாலத்தில் சன்னியாச மனநிலைக்கு வர வேண்டும் என்றே நம் மதம் விதித்திருக்கிறது. அதற்காக இப்போதே பந்த பாசங்களை விட்டு விடவேண்டும் என்பதில்லை. அதுவே தானாக ஒரு பிறவியில் நம்மிடமிருந்து விலகும். கடவுள் நம்பிக்கையோடு தர்ம நெறியில் வாழ்ந்து வந்தால் இயல்பாகவே நடக்கும். வேதத்தில் உள்ள ஸ்ரீருத்ரத்தின் கடைசியில் புகழ் மிக்க ‘மகா மிருத்யுஞ்சய மந்திரம்’ உள்ளது. இதில் வெள்ளரிப் பழம் கொடியிலிருந்து விடுபடுவது போல பாச பந்தங்களிலிருந்து விடுபட வேண்டும் என்பதாக ஒரு உவமை இடம் பெறுகிறது. வெள்ளரிப் பழத்தை இதில் குறிப்பிடுவதற்கு காரணம் இருக்கிறது. வெள்ளரிக்கொடி தரையோடு தரையாகத் தான் படரும். அதன் பழங்கள் தரையிலேயே பழுத்துக் கிடக்கும். அது தரையில் பதிந்திருப்பதால் அதனால் தன்னை நகர்த்திக் கொள்ள இயலாது. ஆனால் அதன் காம்பிலிருந்து கொடி விடுவித்துக்கொண்டு விலகி விடும். அதாவது மற்ற பழங்களைப் போல் வெள்ளரிப் பழம் கொடியிலிருந்து தானாக உதிர்ந்து கீழே விழுவதில்லை. கொடிதான் அதை விட்டுப் பிரிகிறது. ஆன்மா அப்படியேயிருக்க அதைச் சுற்றிப் படர்ந்த பந்தம், பாசங்கள் தானாக விலகி விடும் அதற்குரிய காலம் வரும் போது மனம் பழுத்து வேண்டும். மனம் பக்குவம் அடையும் போது மனிதன் ஞானநிலையை அடைகிறான். ஞானிகள் பந்தத்தை விட்டு விலக வேண்டும் என்பதில்லை. வெள்ளரிக்கொடி எப்படி தன் பழத்தை அப்படியே விட்டுவிட்டுத் தானே விலகுகிறதோ அதுபோல் ஞானிகளுக்கு பந்தபாசம் அவர்களை விட்டு இயல்பாகவே விலகும். கடவுளைச் சரணடைந்து ஞானம் வழங்கும்படி காத்திருந்தால் பந்த பாசம் தானாக விலகும்’’ என்றார் மகாசுவாமிகள்.