கிரேக்கத்தில் வாழ்ந்த ஈசாப் சொன்ன நீதிக்கதை இது. ஒருநாள் காலை நேரம். மரத்தின் மீது இருந்த சேவல் உற்சாகமாய் பலமுறை கூவியது. இதைக் கேட்ட நரி ஒன்று மரத்தடியில் ஒதுங்கியது. அதற்கு சரியான பசி என்பதால் சேவலைக் கொல்ல ஆசைப்பட்டது, அது மரத்தின் மீது இருந்தபடியால் பிடிக்க முடியவில்லை. இதற்காக தந்திரம் செய்ய நினைத்தது. ‘‘சகோதரனே! இந்த நல்ல செய்தியை கேள்விபட்டாயா? பறவைகள், மிருகங்களுக்கு இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டது. இனி ஒருவருக்கொருவர் சண்டையிடக் கூடாது. சகோதர மனப்பான்மையுடன் வாழ வேண்டும். நீ கீழே வந்தால் இந்த நல்ல செய்தியைப் பற்றி பேசலாமே’’ என்றது நரியின் தந்திரத்தை அறிந்த சேவல் துாரத்தில் எதையோ பார்ப்பது போல் தலையைத் துாக்கியது. ‘‘என்ன சகோதரா! அக்கறையாக எதையோ பார்க்கிறாயே என்ன இருக்கிறது? எனக் கேட்டது. ‘‘அங்கே சில வேட்டை நாய்கள் வருவது போலத் தெரிகிறது. அதைத் தான் கவனிக்கிறேன் நரிக்கு உடல் நடுங்க ஆரம்பித்தது “சரி, சரி நான் அப்புறமாக பேசலாம்’’ என்றது. ‘‘இதோ கீழே வருகிறேன். நாய்களைக் கண்டு ஏன் பயப்படுகிறாய்? இப்பொழுது தானே... அனைவரும் ஒற்றுமையாக வாழ ஒப்பந்தம் ஏற்பட்டதாக சொன்னாயே’’ “அது பற்றி நாய்களுக்கு தெரியாமல் இருந்தால் என் கதி என்னாவது... போகிறேன்’’ என்று சொல்லியபடி ஓட்டம் பிடித்தது நரி. ‘‘யாரை ஏமாற்றப் பார்க்கிறாய், உன் பொய் என்னிடம் பலிக்காது” என்று சிரித்தது. கெட்டிக்காரன் புளுகினாலும் அது புத்திச்சாலியிடம் வெளிபட்டு விடும்.