பதிவு செய்த நாள்
22
ஜூலை
2020
03:07
திருப்பூர்: உடல், உள்ளம் மற்றும் உயிர்காக்கும் கந்தசஷ்டி கவசத்தை, ஆக., 9ம் தேதி பாராயணம் செய்யலாம் என, திருப்பூர் கம்பன் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.கந்தசஷ்டி கவசத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்த, பாராயணம் செய்து வழிபடும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
வரும், ஆக., 9ம் தேதி, திருப்பூர் மாவட்டத்தில், கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு, இந்து மக்களுக்கு, திருப்பூர் கம்பன் கழகம் அழைப்புவிடுத்துள்ளது. அதன் செயலாளர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:கந்த சஷ்டி கவசம், உடல், உள்ளம் மற்றும் உயிர் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு தரும் அருமருந்து.இந்து வழிபாட்டு முறையை இழிவுபடுத்துவது, சமீபத்தில் அதிகரித்துவிட்டது. கடவுள், சமய நம்பிக்கை என்பது, உயிரின் மேலான மானத்துக்கு ஒப்பானது.அதை கேலி செய்து கொச்சைப்படுத்துவது, மன்னிக்க முடியாத குற்றம். சமயத்தமிழ் வளர்த்த தமிழ் மண்ணில், போலி பகுத்தறிவு போர்வையில், இந்து சமயத்தை இழிவு படுத்தி வருகின்றனர்.இதுபோன்ற துஷ்ட சக்தியை, அரசு இனியாவது அடையாளம் கண்டு வேரோடு களைய வேண்டும்.நமது மண்ணின் மைந்தர்களாகிய ஒவ்வொரு மதத்தலைவர்களும், இச்செயலை வெளிப்படையாக கண்டிப்பதே, சமய ஒற்றுமைக்கு சிறந்த சான்று. பல்வேறு அருளாளர்கள் அழைப்பை ஏற்று, ஆக., 9ம் தேதி மாலை, திருப்பூர் மாவட்ட மக்கள், தங்கள் வீடுகளின் முன் கூடி, கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வோம்.இவ்வாறு, அவர் கூறினார்.