நியூயார்க்: அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்கு உலகம் முழுதும் உள்ள இந்தியர்கள் நிதி வழங்க அனுமதியளிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க வாழ் இந்தியர் நல ஆர்வலர் பிரேம் பண்டாரி கோரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க வாழ் இந்தியர் நல ஆர்வலரும் ஜெய்ப்பூர் புட் யு.எஸ்.ஏ. அமைப்பின் தலைவருமான பிரேம் பண்டாரி நியூயார்க்கில் கூறியதாவது: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்கு நிதி வழங்க வெளிநாடுகளில் வசிக்கும் 3.2 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் மிகவும் ஆர்வமாக உள்ளனர். அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவில் ஹிந்துகளின் கலாசாரம் வரலாற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது.அதனால் உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் ராமர் கோவிலுக்கு தாங்கள் விரும்பும் நிதியை அளிக்க அனுமதிக்க வேண்டும். இதற்கான எளிய வழிமுறை ஒன்றையும் ஏற்பாடு செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக்கொள்கிறேன். இந்த நிதி அயோத்தி கோயிலை கட்டும் ராமஜன்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளைக்கு நேரடியாக செல்ல வேண்டும். நான் ராமரின் தீவிர பக்தன். அயோத்தியில் கட்டப்பட உள்ள பிரமாண்ட ராமர் கோயிலுக்கு நிதி வழங்க தயாராகஉள்ளேன்.கொரோனா வைரசை தடுக்க பிரதமர் மோடி பி.எம். கேர்ஸ் நிதியத்தை துவக்கிய மறுநாளே ஜெய்ப்பூர் புட் யு.எஸ்.ஏ. அமைப்பு சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.