கோவை உப்பிலிபாளையத்தில், தரணியை காக்கும் தண்டுமாரியம்மன் கோயில் கொண்டிருக்கிறாள். இவளை ஆடி வெள்ளியன்று தரிசிப்பது சிறப்பு. ஆங்கிலேயரிடம் போர் புரிந்த திப்புசுல்தான், தன் படைவீரர்களை கோவை நகரின் கோட்டை மதில்களுக்கு இடையில் ஒரு கூடாரத்தில் தங்க வைத்திருந்தார். அம்மன் மீது பக்தி கொண்ட வீரன் ஒருவனின் கனவில் தோன்றிய மாரியம்மன், வீரர்கள் குடியிருக்கும் பகுதியில் வேப்ப மரங்களுக்கு இடையே உள்ள நீர்ச்சுனையின் அருகில் தான் சிலை வடிவில் இருப்பதாகவும், அங்கு கோயில் அமைத்து வழிபடவும் கட்டளையிட்டாள். வீரன் மறுநாள் குறிப்பிட்ட காட்டுப்பகுதிக்குச் சென்று சுனை அருகிலுள்ள அம்மனை தேடிக் கண்டுபிடித்தான். சக வீரர்களிடம் அம்மன் அருள் புரிந்த விதத்தையும் கூறினான். அனைவரும் ஒன்று கூடி மாரியம்மனை வழிபட்டனர். காலப்போக்கில் கோயில் எழுப்பப்பட்டது. தண்டு என்பதற்கு ‘தங்கு’ என்பது பொருள். தங்கும் இடமாக இருந்ததால் அம்மனுக்கு ‘தண்டு மாரியம்மன்’ என பெயர் உண்டானது.
படை வீரர்கள் தண்டு மாரியம்மனை வணங்கிய சமயத்தில் பலருக்கும் அம்மை உண்டானது. நோய் குணமாக தண்டு மாரியம்மனுக்கு தண்டு கீரைச்சாறால் அபிஷேகம் செய்து, தீர்த்தமாக பருக அனைவருக்கும் நோய் குணமடைந்த அதிசயம் நிகழ்ந்தது. இதன் அடிப்படையிலும் அம்மனுக்கு தண்டுமாரியம்மன் என பெயர் வந்ததாக சொல்வர். கருவறையில் மாரியம்மன் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். உற்ஸவரின் பெயர் அகிலாண்டநாயகி. ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடக்கும். சித்திரை மாதத்தில் அக்னிச்சட்டி ஊர்வலம் நடக்கும். பிரகாரத்தில் ராஜகணபதி, துர்க்கை, தட்சிணாமூர்த்தி, லட்சுமி, முருகன், கருப்பராயன், முனியப்பன் சன்னதிகள் உள்ளன. துவட்டி மரம் தல விருட்சமாக உள்ளது. அம்மை நோய் குணம் அடைந்தவர்கள் அம்னுக்கு பால்குடம், அக்னிச்சட்டி, அங்கப் பிரதட்சிணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். திருமணம் நிறைவேற கன்னிப்பெண்கள் ஆடி வெள்ளியில் அடிப்பிரதட்சணம் செய்கின்றனர். வேண்டுதல் நிறைவேற அலகு குத்தியும், முடிக்காணிக்கை செலுத்தியும் நேர்த்திக்கடன் செய்கின்றனர்.
எப்படி செல்வது? கோவை சிங்கநல்லுார் பேருந்து நிலையத்தில் இருந்து 7 கி.மீ.,