பதிவு செய்த நாள்
29
ஜூலை
2020
04:07
பல்லடம்: கருப்பர் கூட்டம் என்ற அமைப்பினர், கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி, யு டியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர். தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்துக்கு, சிவனடியார்கள், ஆன்மீக பெரியோர், இந்து மதத்தை சேர்ந்த பக்தர்கள் மட்டுமன்றி, பல்வேறு மதத்தினரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தை கண்டித்து பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடந்தன. இச்சூழலில், கருப்பர் கூட்டத்தை கண்டித்து, ஆக.,9 அன்று, தமிழகம் முழுவதும் வேல் பூஜை நடைபெற உள்ளதாக, காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேஸ்வர சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்து மக்களின் மனதை புண்படும்படி, கந்த சஷ்டி கவசம் குறித்து இழிவுபடுத்தி வெளியிடப்பட்ட பதிவு மிகவும் கண்டிக்கத்தக்கது. சமீப காலமாக, இதுபோன்று இந்து மதத்தை இழிவுபடுத்தும் செயல்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த காலங்களில், சிவனடியார்கள், ஆன்மீக பெரியோர்கள் அமைதியான முறையில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வந்தனர். ஆனால், தற்போதுள்ள தலைமுறை அவ்வாறு இல்லை. ஆன்மீக தலைவர்கள், ஆதீனங்கள், சிவனடியார்கள், மற்றும் இந்து அமைப்புகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தால், இப்பிரச்சினை மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, இந்து மதத்தை இழிவுபடுத்தும் இச்செயல் குறித்து, எதிர்ப்பினை பதிவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டம் அமைப்பை கண்டித்து, ஆக., 9 அன்று, தமிழகம் முழுவதும் வேல் பூஜை நடைபெற உள்ளது. இதற்காக, 1,000 வேல்கள் தயாரிக்கப்பட்டு, பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. வீடுதோறும் வேல் எடுத்து செல்லப்பட்டு, சமூக இடைவெளியுடன், வீடுகளின் முன் வேல் பூஜை நடைபெறும். இதற்கு, அனைத்து ஆதீனங்கள், மடாதிபதிகள், மற்றும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.