பதிவு செய்த நாள்
29
ஜூலை
2020
02:07
அயோத்தி: ராமர் கோவிலுக்கான பூமி பூஜையின் போது, ராமரின் பிறப்பு, சிறப்பு, அயோத்தியின் முக்கியத்துவம் உள்ளிட்ட தகவல்களை தாமிர தகட்டில் எழுதி, அதை, டைம் கேப்சூல் எனப்படும் குடுவைக்குள் வைத்து, 2,000 அடி ஆழத்தில் புதைக்கவுள்ளதாக, பரபரப்பு தகவல்கள் வெளியாகின.
எதிர்கால சந்ததியினர் ராமர் கோவில் பற்றிய வரலாற்றை தெரிந்து கொள்ளும் விதமாகவும், எதிர்காலத்தில் இது குறித்து சர்ச்சை எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காகவும், ராமர் கோவில் பற்றிய புகைப்படங்கள், ஆவணங்களும், இந்த கேப்சூலுக்குள் வைத்து, புதைக்கப்பட்டு, பாதுகாக்கப்படவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், ராமர் கோவில் அறக்கட்டளை பொதுச் செயலர் சம்பத் ராய், இதை மறுத்துள்ளார். அவர் கூறியதாவது: பூமி பூஜையின் போது, டைம் கேப்சூல் புதைக்கப்பட உள்ளதாக வெளியான தகவல், ஒரு சிலரின் கற்பனை. டைம் கேப்சூல் விவகாரம் குறித்து, அறக்கட்டளை நிர்வாகிகள் ஒருபோதும் விவாதித்தது இல்லை. அது போன்ற திட்டம் எதுவும் எங்களிடம் இல்லை. இவ்வாறு, அவர் கூறினார்.