பதிவு செய்த நாள்
30
ஜூலை
2020
01:07
மதுரை : ஊரடங்கால் கோவில்களில் திருவிழாக்கள், பூஜைகள் நடக்கும் நிலையில், கட்டளை படி பூஜைகள் நடத்தப்படாமல் உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் உட்பட பெரும்பாலான கோவில்களில், மன்னர்கள் காலத்தில் இருந்து கட்டளை படி பூஜைகள் நடத்தப்படுகின்றன. மன்னருக்கோ, அரசுக்கோ உதவிய வகையில், அவர்களை கவுரவிக்கும் வகையில், குறிப்பிட்ட குடும்பத்தினருக்கு, செப்பு பட்டய சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதன்படி, திருவிழாக்களில் கட்டளைதாரர்களான அக்குடும்பத்திற்கு, கோவில் சார்பில் மரியாதை அளிக்கப்படுகிறது. அதேபோல், செல்வந்தர்கள், ஜமீன்தார்கள், தங்கள் நிலம், கட்டடங்களை கோவில்களுக்கு எழுதி வைத்து, அதன் வாயிலாக கிடைக்கும் வருவாயில், பூஜைகள் செய்ய ஏற்பாடு செய்தனர்.
இவர்களின் வாரிசுகள் நிரந்தர கட்டளைதாரர்கள் என்றழைக்கப்படுகின்றனர். ஊரடங்கால் பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், பூஜைகளும், திருவிழாக்களும் நடத்தப்பட்டு வருகின்றன. அதேசமயம் கட்டளைப்படி பூஜைகள் நடத்தப்படுவதில்லை. பாரம்பரியமாக நடந்து வரும் இப்பூஜைகள் நடக்காதது, கட்டளைதாரர்கள் இடையே வருத்தத்தை ஏற்படுத்தி யுள்ளது. கட்டளைதாரர்கள் கூறியதாவது:தற்போது, அழகர்கோவில் ஆடி உற்சவ விழா நடக்கிறது.
இதற்காக, கோவிலுக்குள் உபயதாரர்களுக்கு மரியாதை செய்யப்படுகிறது. அதேசமயம் நிரந்தர கட்டளைதாரர்களான எங்களை புறக்கணிப்பது நியாயமில்லை. இதேபோல் தான், எல்லா கோவில்களிலும் நடக்கிறது. கட்டளைதாரர்கள் அரசின் விதிகளை பின்பற்றி, பூஜையில் பங்கேற்க தயாராக உள்ளோம். அரசு பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.