சுமங்கலி பாக்கியத்துடன் வாழ பெண்கள் மேற்கொள்ளும் நோன்பு வரலட்சுமி விரதம். இதை ஆடம்பரமாக செய்ய வேண்டும் என்பதில்லை. அவரவர் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப எளிமையாகவும் செய்யலாம். கலசம் வைத்து, விக்னேஸ்வர பூஜை முதல். சங்கல்பம், கலச பூஜை, பிராண பிரதிஷ்டை, ஷோடச உபசாரம், ஆரத்தி ஆகியவற்றை புரோகிதர்கள் மூலம் சிறப்பாக நடத்தலாம். புரோகிதர் வைக்காதவர்கள் மகாலட்சுமி 108 போற்றி, அஷ்டோத்திரம் சொல்லி பூக்களால் அர்ச்சனை, நைவேத்யம் செய்ய வேண்டும். பின்னர் மூத்த சுமங்கலிகள் மற்ற பெண்களின் வலது கையில் கயிறு கட்டி விட வேண்டும். அப்போது..
‘‘சர்வ மங்கள மாங்கல்யே ஸர்வபாப ப்ரணாசிநி! தோரகம் ப்ரதிக்ருஹ்ணாமி ஸுப்ரீதா பவ ஸர்வதா!!’’ என்ற மந்திரம் சொல்லி கயிறை கையில் எடுக்க வேண்டும். ‘‘நவ தந்து ஸமாயுக்தம் கந்தபுஷ்ப சமன்விதம் பத்னீயாம் தட்சிணே ஹஸ்தே தோரகம் ஹரிவல்லபே’’ என்ற மந்திரத்தை ஜபித்து கயிறை கட்ட வேண்டும். இதை சொல்ல முடியாதவர்கள்,
‘‘நாராயணரின் பத்னியான மகாலட்சுமியே! ஒன்பது இழைகளும், ஒன்பது முடிச்சும் கொண்ட இந்த மஞ்சள் கயிற்றினை பிரசாதமாக ஏற்று வலது கையில் கட்டிக் கொள்கிறேன். எனக்கு அருள்புரிய வேண்டும்’’ என்று சொல்லி வழிபட வேண்டும். பின்னர் மூத்த சுமங்கலிகளிடம் ஆசி பெற வேண்டும்.