பதிவு செய்த நாள்
31
ஜூலை
2020
08:07
மதுரை, குலவை சத்தம் அதிர...காய்ச்சிய கூழ் மணமணக்க... பெண் பக்தர்கள் அருள் வந்து ஆட... ஆடியில் அம்மன் கோயில்கள் அமர்க்களப்படும். அதுவும் ஆடி வெள்ளியில் பக்தி பரவசத்திற்கு பஞ்சமிருக்காது. கொரோனா ஊரடங்கால் அம்மனை காணாத ஏக்கத்தில் 4 மாதங்கள் கடந்து ஓட, ஆடியிலாவது கண்கள் மலர காண அடி எடுத்து வைக்கலாம் என்ற பெண்களின் கனவு கனவாகவே நீடிக்கிறது. ‘அம்மா ... உன் தரிசனம் கிடை க்காதா’ என கோயில் வாசலை தொட்டு கும்பிட்டு ஏக்கத்துடன் திரும்பும் மதுரை பெண் பக்தர்களின்
மனநிலை எப்படி இருக்கிறது. அவர்களே சொல்கிறார்கள்.
அம்மனுக்கு உகந்த ஆடி: ஒவ்வொரு ஆடி மாதமும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் குடும்பத்தினருடன் அம்மன் கோயிலுக்கு சென்று விடுவேன். ஆனால் இந்தாண்டு செல்ல முடியாதது வருத்தமாக இருக்கிறது. வீட்டிலேயே அம்மன் வழிபாடு தொடர்கிறது. ஆடிபட்டம் தேடி விதை என விவசாயிகள் இந்த மாதத்தில் தான் விவசாய பணிகளை துவங்குவர். உணவிற்கும், வழிபாட்டிற்கும் உகந்தது ஆடி. தலை யாடி, நடு ஆடி, கடையாடி என தென் மாவட்டங்களில் நம் கலாசாரம், பண்பாட்டை பறைசாற்றும் வகையில் ஆடியில் வீடுகளில் பலகாரங்கள் செய்து பரிமாறுவர். அடுத்தாண்டு ஆடியில் கோயில்களில் சென்று வழிபட அம்மன் அருள்புரிய வேண்டும். –தனலட்சுமி
மனசுக்குள் மீனாட்சி தரிசனம்: ஒவ்வொரு வாரமும் வியாழன் சாய்பாபா, வெள்ளிகாட்டு பிள்ளையார், சனி நரசிங்க பெருமாள் கோயில் செல்வது வழக்கம். தற்போது ஆடி வெள்ளிகளில் மீனாட்சி அம்மனை தரிசிக்க முடியாமல் மனசுக்குள் அவளின் உருவத்தை நினைத்து தரிசிக்கிறேன். ஊரடங்கால் பூட்டிய கோயில்களுக்கு முன் நின்று கும்பிடுகிறேன். தினமும் வீட்டில் விளக்கேற்றி, பூஜை செய்து சுவாமி கும்பிட்டு மனதை தேற்றுகிறேன். என்ன தான் வீட்டில் கும்பிட்டாலும் கோயிலில் மந்திரங்கள், மங்கல வாத்தியங்கள் முழங்க சுவாமிக்கு தீபாராதனை, அபிஷேகம், அர்ச்சனை செய்வதை பார்த்து கும்பிடுவது போல் வராது. விரைவில் கொரோனா நீங்கி கோயில்கள் திறக்க இறை வனை வேண்டுகிறேன். –கே.விஜயலட்சுமி
எந்த காரியத்தையும் தொடங்க முடியல: பத்தாண்டுகளாக கோயில்களுக்கு சென்று வருகிறேன். அதிலும் ஆடி மாதம் என்றால் ஒவ்வொரு வெள்ளியும் ஒவ்வொரு அம்மன் கோயிலுக்கு சென்று வருவேன். நம் வாழ்க்கையில் கோயிலுக்கு செல்வது என்பது ஒரு பகுதியாக கருதுகிறேன்.அம்மன் கோயில்களில் பிரசாதமாக தரும் கூழ்கூட இம்முறை கிடைக்காதது மனவேதனையை தருகிறது. ஒரு நல்ல காரியத்தை தொடங்கும் முன் கோயிலுக்கு சென்று அம்மனிடம் வேண்டி ஆரம்பிப்பது வழக்கம். ஆனால் ஊரடங்கால் முடியாததால் எந்த காரியத்தையும் தொடங்க முடியாமல் இருப்பது வருத்தமாக உள்ளது. எங்களை போன்ற பக்தர்களுக்கு இது சோதனை ஆண்டாகவே உள்ளது. விரைவில் இந்நிலை மாற வேண்டும். அதைதான் அம்மனிடமும் வேண்டுதலாக வைத்து வருகிறேன்.-ஜனனிஅம்பாள் காப்பாள்பெண் தெய்வ வழிபாட்டிற்கு உகந்ததாக ஆடி கருதப்படுகிறது. வழக்கமாக ஆடி வெள்ளிக்கிழமைகளில் எங்கள் பகுதியை சேர்ந்த பெண்கள் தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலுக்கு சென்று விடுவோம். ஆற்றில் குளித்து அண்டாவில் கூழ் காய்ச்சி பக்தர்களுக்கு வினியோகித்து நாங்களும் அருந்துவோம். மனதிற்கு இதமாக இருக்கும். ஆனால் இந்தாண்டு கொரோனா ஊரடங்கால் நகரிலுள்ள மாரியம்மன் கோயிலுக்கு கூட செல்ல முடியவில்லை. இந்த கொடிய கொரோனாவை ஒழித்து அகிலத்தை அம்பாள் காப்பது உறுதி. கடந்த வெள்ளியன்று ஊர் துர்க்கையம்மனுக்கு கூழ் படைத்து வினியோகித்தோம். இன்று வரலட்சுமி விரதமும் கூட. கண்டிப்பாக இந்த ஆடியிலும் அம்மன் அருள் சேரும்.-கோகிலா