பதிவு செய்த நாள்
04
ஆக
2020
03:08
பேரையூர் : மதுரை மாவட்டம் பேரையூர் அருகில் காரைக்கேணி ஊராட்சி செங்கமேடு பகுதியில் பழமையான மகாவீரர் சிற்பம் மற்றும் ராஜராஜசோழன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டன. இப்பகுதியில் பழங்காலத்து பானை ஓடுகளும், செங்கற்களும் அதிகளவில் கிடைப்பதால் தொல்லியல் துறை அகழாய்வு செய்ய முன்வர வேண்டும். மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி வரலாற்று துறை தலைவர் முனீஸ்வரன், மாணவர்கள் மணி, பழனிமுருகன், வழக்கறிஞர் நாகபாண்டியன் கொண்ட குழுவினர் பழமையான சத்திரம், கிணற்றை ஆய்வு செய்தபோது, சுவர் கற்களில் பழமையான தமிழ் மற்றும் வட்டெழுத்து கல்வெட்டுகள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
அது முதலாம் ராஜராஜசோழன், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தைச் சேர்ந்தது எனத்தெரியவந்தது. அங்கிருந்து 500 மீட்டர் துாரத்தில் ஒரு மகாவீரர் சிற்பமும் கண்டுபிடிக்கப்பட்டது.13ம் நுாற்றாறண்டை சேர்ந்தவைமுனீஸ்வரன் கூறியதாவது: சிறுசிறு துண்டுகளாய் சேதமடைந்த நிலையிலிருந்த தமிழ்க் கல்வெட்டுகளில் உள்ள சொற்களைக் கொண்டு, அவை கி.பி.13ம் நுாற்றாண்டைச் சேர்ந்த முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் மெய்க்கீர்த்தி கல்வெட்டு என்பதை அறியமுடிகிறது. சத்திரத்தின் தரையிலும், கிணற்றின் உள்ளேயும் 8 வட்டெழுத்து துண்டு கல்வெட்டுகள் இருந்தன. இவை காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி என்ற விருதுப் பெயருடன் தொடங்கும் முதலாம் ராஜராஜசோழனின் 13ம் ஆட்சியாண்டை சேர்ந்தவை. இதன்காலம் கி.பி.998 ஆகும். கிரந்த எழுத்து கலந்து எழுதப்பட்டுள்ள இதில், செங்குடி நாட்டில் உள்ள திரு உண்ணாட்டூர் என்ற ஊர் கோயிலில் விளக்கு எரிக்கக் கொடுத்த கொடை பற்றிச் சொல்லப்பட்டுள்ளது. இக்கோயிலின் பெயர் அர்ஹா எனத் தொடங்குகிறது. அதன் மீதி பகுதி சத்திரத்தில் உள்ள துாணின் அடிப்பகுதியில் மறைந்துள்ளது. சமஸ்கிருதத்தில் உள்ள இதனை அருகன் எனக்கொண்டால் இதை சமணப்பள்ளியாக கருதலாம். இதன் அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 24வது சமணத் தீர்த்தங்கரரான மகாவீரரின் கருங்கல் சிற்பமும் இதை உறுதியாக்குகிறது.
இதன் காலம் கி.பி.9ஆம் நுாற்றாண்டாக கருதலாம். மகாவீரர் சிற்பம் மற்றும் கல்வெட்டுகள் மூலம், கி.பி.9ஆம் நுாற்றாண்டு முதல் கி.பி.13ஆம் நுாற்றாண்டு வரையில் இங்கு ஒரு சமணப்பள்ளி வழிபாட்டில் இருந்து அழிந்ததை அறியமுடிகிறது. இப்பகுதியில் சிதறி கிடக்கும் செங்கற்கள் மூலம் இங்கு இருந்த சமணப்பள்ளி முழுவதும் செங்கற்களால் கட்டப்பட்டதாக இருந்திருக்கும் எனக்கருதலாம். கல்வெட்டில் குறிப்பிடப்படும் திருஉண்ணாட்டூர் என்னும் ஊர், இப்பகுதியில் இருந்து அழிந்து போன ஊராக இருக்கலாம். இங்கு இடைக்காலத்தை சேர்ந்த பானை ஓடுகளும், செங்கற்களும் அதிகளவில் சிதறிக்கிடக்கின்றன, என்றார்.கீழடி போன்று இப்பகுதியிலும் தொல்லியல் துறை அகழாய்வு செய்தால் பல ஆச்சரியங்கள் காத்திருக்கலாம் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.