பதிவு செய்த நாள்
15
மே
2012
05:05
அமரகோசம் என்ற புகழ்பெற்ற நூலை சமணமதத்தைச் சேர்ந்த அமரசிம்மன் எழுதினார். அந்நூல் ஒரு காலத்தில் அழிய இருந்தது. அதை அழிய விடாமல் காத்தவர் இந்துவான ஆதிசங்கரர் என்பது ஆச்சரியமான விஷயம். சமண, இந்து மதங்களுக்கிடையே தகராறு நடந்த அக்காலத்தில் இந்த அதிசயம் எப்படி நிகழ்ந்ததெனக் கேளுங்கள். ஆதிசங்கரர் சமணமத விற்பன்னர்களை வாதத்தில் வென்று சாதனை படைத்துக் கொண்டிருந்தார். அவருக்கு இந்துமதக் கருத்துக்கள் பிடிக்காதென்றாலும், அறிவாளியான அவருக்கு இந்து தெய்வமான சரஸ்வதியின் மீது மட்டும் நம்பிக்கை உண்டு. சரஸ்வதியை வணங்கிய பிறகு தான் எழுத்துப்பணியைத் தொடங்குவார். சரஸ்வதி மதங்களைக் கடந்தவள் அல்லவா? திறமையுள்ள எவரையும் ஆசிர்வதிக்கும் பெருந்தன்மை கொண்ட அந்த தாய் அமரசிம்மனுக்கும் அருள் தந்தாள். ஆதிசங்கரர் இந்துமதக் கொள்கைகள் பற்றி பேசுவதும், எப்பேர்ப்பட்ட பிரபலங்களையும் அவர் வென்று விடுவதும் அமரசிம்மனுக்கு எரிச்சலை மூட்டியது. அமரசிம்மனின் திறமை பற்றி ஆதிசங்கரருக்கு நன்றாகவே தெரியும். எதிரிகள் முகாமில் இருக்கும் குறைகளை விட நிறைகளை தான் ஒருவன் மதிப்பிட வேண்டும். ஆதிசங்கரர் அவரது நிறைகளை மதிப்பிட்டார். கல்வியில் அமரசிம்மன் நிபுணன் என்பதைப் புரிந்துகொண்டார்.
அந்த திறமைசாலியை ஆதிசங்கரர் வாதப்போட்டிக்கு அழைத்தார். ஆதிசங்கரரின் மகிமையை உணர்ந்தவர் அமரசிம்மன். தன்னால், சங்கரரை வாதத்தில் வெல்ல முடியாது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். எனவே, தன் இஷ்ட தெய்வமான சரஸ்வதியை அவர் பூஜித்தார். சங்கரரை வாதத்தில் வெல்ல அந்த அறிவுஜீவிக்கு பொருத்தமான ஒரு யோசனை தென்பட்டது. சங்கரரே! தங்களுடன் வாதம் செய்ய நான் தயார். ஆனால், ஒரே ஒரு நிபந்தனை. உங்களுக்கும் எனக்கும் இடையே ஒரு திரை போட்டு மறைத்து விட வேண்டும், அவ்வளவு தான், என்றார். சங்கரரும் சம்மதித்தார். ஆனால், திரை மறைப்பிற்கான காரணம் அவருக்கு விளங்கவில்லை. போட்டி துவங்கும் முன் திரை கட்டப்பட்டது. அமரசிம்மன் ஒருபுறமும், ஆதிசங்கரர் மறுபுறமும் அமர்ந்தனர். அமரசிம்மன் ஒரு கும்பத்தை எடுத்து நீர் நிரப்பி, அதில் சரஸ்வதியை வந்து அமரும்படி ஆவாஹனம் செய்தார். தாயே! ஆதிசங்கரரை வெல்லும் சக்தி எனக்கில்லை. எனவே, அவர் கேட்கும் கடினமான கேள்விகளுக்குரிய பதிலை நீ சொல்லித்தர வேண்டும், என மனதார வேண்டினார். சங்கரர் கேள்விகளை அடுக்கினார். அமரசிம்மனுக்கு கலைவாணி உதவினாள்.
மளமளவென பதில் சொன்னார். அத்தனையும் தெளிவான தீர்க்கமான பதில்கள். சங்கரர் அசந்து போனார். எல்லா கேள்விகளுக்கும் இவனால் எப்படி பதிலளிக்க முடிகிறது என ஞானதிருஷ்டியின் மூலம் தெரிந்து கொண்டார். மறுபுறத்தில் சரஸ்வதியை ஆவாஹனம் செய்துள்ளது தெரிந்தது. தாயே! நீ அனைவருக்கும் தெய்வம். ஆனால், உன்னைச் சார்ந்துள்ள எங்களை பாதுகாப்பதல்லவா உன் முதல் கடமை. சுயநலம் கருதி தானே, அந்த சமணன் உன்னை ஆவாஹனம் செய்திருக்கிறான். நீ உதவுவது முறையா?என்றார். சரஸ்வதி சிரித்தாள். அங்கிருந்து மறைந்துவிட்டாள். பின்னர் கேள்விகளை அள்ளி வீசினார் சங்கரர். அமரசிம்மனால் பதிலளிக்க முடியவில்லை. தோற்றுப் போன அவர் தான் எழுதிய அமரகோசம் என்ற நூலுடன் தீக்குளிக்கச் சென்றார். சங்கரர் அவரை தடுத்து நிறுத்தினார். மகனே! நீ எழுதிய அமரகோசம் ஒப்புயர்வற்ற நூல். உன் திறமை கண்டு கலைவாணியே உனக்கு உதவுகிறாள் என்றால் நீயும், உன் திறமையும் உலகுக்கு பயன்பட வேண்டும். தற்கொலை எண்ணத்தைக் கைவிடு, என்றார்.
சரஸ்வதி மதங்களை கடந்த தெய்வம். திறமை இருக்குமிடத்தில் சரஸ்வதி கடாட்சம் இருக்கும்.