பதிவு செய்த நாள்
06
ஆக
2020
01:08
தொண்டாமுத்தூர்: கோவையில், அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை போடப்பட்டுள்ளது, பல நூற்றாண்டுகளாக இந்துக்களின் மனதில் உள்ள லட்சியத்தின் முதல் படியாகும் என, பா.ஜ., மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கு பூமி பூஜை நேற்று நடந்தது. நாடு முழுவதும், அனைத்து பகுதிகளிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வை கொண்டாடும் வகையில், பா.ஜ., மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன், கோவை, உலியம்பாளையத்தில் உள்ள தனது வீட்டில், நேற்று மாலை, அகல் விளக்குகள் ஏற்றி, ராமரின் திருவுருவ படத்திற்கு பூஜை செய்தார். இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ ராம கீர்த்தனைகள் பாடப்பட்டது. இதில், உறவினர்கள் மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து பா.ஜ., மாநில துணைத்தலைவர் வானதி சீனிவாசன் கூறுகையில்,"பல நூற்றாண்டுகளாக உலகம் முழுவதும் உள்ள இந்துக்களின் தீவிரமான லட்சியத்தின் முதல் படி. அயோதியில் ஸ்ரீ ராமபிரானுக்கு கோவில் அமைப்பதற்கு, நாட்டினுடைய பிரதமர் அடிக்கல் நாட்டி இருப்பது, இந்துக்களுடைய மனதில் புத்துணர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் அமைவதற்காக தங்களின் இன்னுயிர் மற்றும் வாழ்க்கையைத் தியாகம் செய்தவர்களின், தியாகத்தை நாம் வணங்கி, போற்றுவோம்,"என்றார்.