பதிவு செய்த நாள்
09
ஆக
2020
11:08
சென்னை; மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய கோவில்கள், வழிபாட்டு தலங்கள் நாளை முதல் திறக்கப்பட்டு, பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்; ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளுக்கும் அனுமதி அளிக்கப்படும் என, முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுதும், வரும், 31ம் தேதி வரை, பொது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் வாழ்வாதாரம் கருதி, அவ்வப்போது முதல்வர் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறார்.ஞாயிற்றுக்கிழமை தவிர, மற்ற நாட்களில், கடைகள் அனைத்தும் திறக்க, வாகனங்களை இயக்க அனுமதிஅளிக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல, இ- - பாஸ் நடைமுறை தொடர்கிறது. அதை நீக்க வேண்டும் என, அனைத்து தரப்பினரும் வலியுறுத்திவருகின்றனர்.கடந்த மாதம், ஊராட்சி பகுதிகளில், ஆண்டு வருமானம், 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான வழிபாட்டு தலங்களை திறக்க, அனுமதி அளிக்கப்பட்டது.இம்மாதம், பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில், ஆண்டு வருமானம், 10 ஆயிரத்திற்கு குறைவான வழிபாட்டு தலங்களை திறக்க, அரசு அனுமதி அளித்தது. எனினும், பெரிய கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்நிலையில், மாநக ராட்சி பகுதிகளிலும் சிறிய வழிபாட்டு தலங்களை, நாளை முதல் பொதுமக்கள் தரிசனத்திற்கு திறக்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக, முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை:அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ள, நிலையான வழிகாட்டி நடைமுறைகளை பின்பற்றி, மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய கோவில்கள் திறக்கப்படும்.அதாவது, 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள கோவில்கள்; சிறிய மசூதிகள்; சிறிய தர்காக்கள்; தேவாலயங்கள் ஆகியவற்றில், மாவட்ட கலெக்டர்கள் அனுமதியுடன், நாளை முதல், பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சி பகுதியில், இதற்கான அனுமதியை, சென்னை மாநகராட்சி கமிஷனரிடம் பெற வேண்டும். மற்ற மாநகராட்சி பகுதிகளில், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களிடம், அனுமதி பெற வேண்டும்.ஓட்டுனர் பயிற்சி பள்ளிஅதேபோல, தமிழகம் முழுதும், ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள், நாளை முதல் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த, அரசின் நிலையான வழிகாட்டி முறைகளை, பொதுமக்கள் கடைப்பிடித்து, ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு, முதல்வர் கூறியுள்ளார்.