சென்னை, நாம சங்கீர்த்தனம் மூலம், இறைவனை அடையும் வழியை போதித்த, சஞ்சீவி பாகவத சுவாமிகளின் நுாற்றாண்டு விழா, விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சத்குரு தியாகராஜ சுவாமிகள், எந்தரோ மஹாநுபாவுலு அந்தரிக்கி வந்தனமு என்றார். அதன், அர்த்தம், என்னுடைய நமஸ்காரங்களை, பக்தியாலும், ஞானத்தாலும் எட்ட முடியாத உயரத்தை, ஆன்மிகப் பாதையில் அடைந்தவர்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன் என்பது தான்.அதன் வழியில், சிறந்த ஆன்மிகவாதியான, புதுக்கோட்டை, சஞ்சீவி பாகவத சுவாமிகள், கடந்த, 1920ம் ஆண்டு, ஆவணி மாதம், கோபாலகிருஷ்ண பாகவதரின் மகனாக பிறந்தார்.பக்தி மார்க்கத்தை வாழ்க்கையின் நெறியாக கொண்ட இவரிடம், சிறுவயது முதல், சங்கீத ஞானம் அதிகம் காணப்பட்டது.நாம சங்கீர்த்தனம் மூலம், மனிதன் இறைவனை அடைய முடியும் என்பதை, வியாச முனிவர் உலகிற்கு உணர்த்தினார். அதை, பல முனிவர்கள் பின்பற்றினர்.அதன்படி, நாம சங்கீர்த்தனங்களை செய்து வந்த தந்தையின் வழியில் பயணித்து, மற்றவர்களுக்கும் உணர்த்தினார். அதை சாதாரண மக்களுக்கும் போதித்தார்.நாடு முழுதும் உள்ள, பல்வேறு கிராமங்களுக்கு சென்று, பஜனை மார்க்கத்தின் வாயிலாக, ஆன்மிக போதனை வழங்கினார்.புதுக்கோட்டையில், ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி உற்சவத்தை, கோபால கிருஷ்ண பாகவத சுவாமிகள் ஆண்டுதோறும் விமரிசையாக நடத்தினார். அவருக்கு பின், சஞ்சீவி பாகவத சுவாமிகள் விமரிசையாக நடத்தினார்.குடும்பத்தினர், சிஷ்யர்கள் சார்பில், சஞ்சீவி பாகவத சுவாமிகளின் நுாற்றாண்டு துவக்க விழா, கடந்தாண்டு விமரிசையாக கொண்டாடப்பட்டது.இந்நிலையில், சஞ்சீவி பாகவத சுவாமிகளின் நுாற்றாண்டு விழா, நேற்று முதல், 22ம் தேதி வரை, சென்னை, மதுரை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட, பல இடங்களில் கொண்டாடப்படுகிறது.