பதிவு செய்த நாள்
18
ஆக
2020
01:08
சென்னை: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள கமலா ஹாரிஸ், முந்தைய எம்.பி., மற்றும் தலைமை வழக்கறிஞர் தேர்தல்களின் போது தன் வெற்றிக்காக, சென்னையில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் தேங்காய் உடைக்கும் படி கேட்டுக்கொண்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் முதல் முறையாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிசை துணை அதிபர் வேட்பாளராக ஜோ பிடன் அறிவித்துள்ளார். இவருக்கும் சென்னைக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. முக்கியமாக, கமலா ஹாரிசின் மனதுக்கு நெருக்கமான இடம், பெசன்ட் நகரில் உள்ள வரசித்தி விநாயகர் கோவில் என, அவரது சித்தி சரளா கோபாலன் தெரிவித்துள்ளார். இக்கோவில் கட்டுமான பணியின் போது, அதன் கமிட்டி உறுப்பினராக கமலா ஹாரிசின் தாய் ஷியாமலா கோபாலன் இருந்துள்ளார். 2011ல் கமலா ஹாரிஸ் கலிபோர்னியாவின் தலைமை வழக்கறிஞராக போட்டியிட்ட போது, பெசன்ட் நகரிலுள்ள தனது சித்தியை தொடர்பு கொண்டு, எனக்காக வேண்டிக்கொண்டு வரசித்தி விநாயகர் கோவிலில் தேங்காய் உடையுங்கள் எனக் கூறியுள்ளார். அவரும் 108 தேங்காய் உடைத்துள்ளார். வெற்றிக்கு பின் தன் சித்தியிடம் பேசிய அவர், உங்கள் வேண்டுதல் வேலை செய்துவிட்டது. நீங்கள் உடைத்த ஒவ்வொரு தேங்காய்க்கும் எனக்கு ஆயிரம் ஓட்டுக்கள் கிடைத்துள்ளன என, மன மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
இதேபோல், 2016ல் ஜனநாயக கட்சி சார்பில் எம்.பி.,யாக கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். அப்போதும் அவரது சித்தி 108 தேங்காய் உடைத்து வேண்டிக் கொண்டுள்ளார். அந்த தேர்தலிலும் அவர் அமோக வெற்றி பெற்றுள்ளார். தற்போது உலகின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட பதவிகளில் ஒன்றான அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு கமலா போட்டியிடுகிறார். பெசன்ட் நகரிலிருந்து குடிபெயர்ந்துவிட்டாலும், அவருக்காக வந்து மீண்டும் 108 தேங்காய்களை உடைத்து வழிபடுவேன் என, அவரது சித்தி சரளா கோபாலன் தெரிவித்துள்ளார்.