பதிவு செய்த நாள்
22
ஆக
2020
08:08
விநாயகர் சதுர்த்தி ஆண்டுதோறும், ஆவணி மாத வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. இது, விநாயகரின் பிறந்த நாளாக கருதப்படுகிறது.
மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி ஆட்சிக் காலத்திலேயே, விநாயகர் சதுர்த்தி விழா நடத்தப் பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து, மஹாராஷ்டிர மாநில மக்களின், குடும்ப விழாவாக மாறியது. சுதந்திர போராட்டக் காலத்தில், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பாலகங்காதர திலகர், பொதுமக்கள் இணைந்து நடத்தும் திருவிழாவாக மாற்றினார். அதன்பின், தென் மாவட்டங்களிலும் கோலாகலமாக, ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழகத்தில், குறிப்பாக சென்னை நகரில், ஆங்காங்கே விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தும் பழக்கம் வந்தது. இந்தாண்டு ஊரடங்கு காரணமாக, விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்படவில்லை. இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், களிமண் விநாயகர் சிலை விற்பனை, அமோகமாக நடந்து வருகிறது.
குறைந்தபட்சம், 30 ரூபாயில் இருந்து, 2,000 ரூபாய் வரை, விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்படுகின்றன. குடை, 30 ரூபாய் முதல், 100 ரூபாய் வரையிலும், அருகம்புல், எருக்கம்பூ மாலை, 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. சென்னை நகரில் உள்ள, பிரசித்தி பெற்ற விநாயகர் கோவில்களில், கணபதி ஹோமத்துடன் சிறப்பு வழிபாடுகள், நேற்று முதல் துவங்கின. இன்று, சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்படுகின்றன. ஊரடங்கு காரணமாக, பூஜைப் பொருட்கள் விலை கணிசமாக உயர்ந்துள்ளன.