பார்வதி, பரமேஸ்வரனின் பிள்ளைகள் விநாயகர், முருகன் என்பது தெரியும். ஆனால் மூத்த பிள்ளை விநாயகரை மட்டும் பிள்ளையார் என மதிப்புடன் அழைக்கிறோம். குடும்பத்தில் தந்தையை தந்தையார் என்றும், தாயை தாயார் என்றும், தமையனை தமையனார் என்றும், அண்ணியை அண்ணியார் என்றெல்லாம் மரியாதையுடன் அழைக்கலாம். ஆனால், நம் வீட்டுப் பிள்ளைகளை பிள்ளையார் என்று அழைப்பதில்லை. அந்த மரியாதை விநாயகருக்கு மட்டுமே தரப்படுகிறது. இதற்கு காரணம் பார்வதி, பரமேஸ்வரன் என்ற பெரிய வீட்டுக்காரர்களின் பிள்ளை விநாயகர் என்பதோடு, கருணை, பலம், புத்திக்கூர்மை, அன்புமனம் கொண்டவர் என்பதால், பிள்ளையார் என போற்றப்படுகிறார். விநாயகரை வழிபட பலன் உடனடியாகக் கிடைக்கும் என்பதால், கணபதி பூஜை கைமேல் பலன் என்று பழமொழியாகச் சொல்வர்.