மயில் என்றால் தோகை, கவரிமான் என்றால் வால், சிங்கம் என்றால் பிடரி என்பது போல, யானை என்றாலே தந்தம் தான் அழகு. யானையும் தன் தந்தத்தை எப்போதும் அக்கறையோடு பாதுகாக்கும். ஆனால், விநாயகர் என்னும் யானை மட்டும் தனக்கு அழகும், கவுரவமும் தரும் தந்தத்தை தியாகம் செய்ய முன் வந்தது. மகாபாரதம் என்னும் காவியம் எழுத தன் ஒற்றைக் கொம்பை எழுத்தாணியாக்கிய பெருமை விநாயகரைச் சேரும். இப்படி ஆக்கப்பணியில் ஈடுபட தந்தம் கொடுத்த விநாயகர், அசுர சக்தியை அழிக்கவும் பயன்படுத்தினார். கஜமுகாசுரனை வதம் செய்ய ஆயுதம் எதையும் பயன்படுத்தவில்லை; தந்தத்தாலேயே குத்திக் கொன்றார்.வக்ர துண்டர், மகோத்ரதர், கஜானனர், லம்போதரர், விகடர், விக்னராஜர், துாம்ரவர்ணர், சூர்ப்பகர்ணர் என்னும் எட்டு அவதாரங்கள் விநாயகர் எடுத்ததாக விநாயகர்புராணம் கூறுகிறது. விநாயகர் சதுர்த்தி விரதத்தை ஆவணி வளர்பிறை சதுர்த்தி முதல், புரட்டாசி வளர்பிறை சதுர்த்தி வரை மேற்கொள்ள வேண்டும் என்று விநாயகர் புராணம் கூறுகிறது.
மனித முகத்தோடு இருக்கும் நரமுக கணபதி, திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்திற்கு அருகிலுள்ள செதிலப்பதியில் கோவில் கொண்டிருக்கிறார்.