பதிவு செய்த நாள்
24
ஆக
2020
12:08
செக்கானுாரணி: செக்கானுாரணி கிண்ணிமங்கலம் ஏகநாதர் சுவாமி பள்ளிபடை சாமது மடத்திற்கு 300 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையை ஆண்ட நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்த கடைசி அரசிமீனாட்சி நாயக்கர் வழங்கிய தன்ம சிலா சாதன பட்டயம் கல்வெட்டு கிடைத்துள்ளது.
இக்கல்வெட்டு 4அடிக்கு 2 அடி உள்ளது. உசிலம்பட்டி வரலாற்று ஆய்வாளர் காந்திராஜன், மடத்தை நிர்வகிக்கும் அருளானந்தம் சுவாமிகள், தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம், தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் ஆகியோர் கல்வெட்டில் உள்ள எழுத்துக்களை ஆராய்ந்தனர்.
அவர்கள் கூறியதாவது: 1722 ஆடி 19 ம் நாள் வழங்கப்பட்டுள்ளது இப்பட்டய கல்வெட்டு. ஏகநாத குருமடத்தார் மடத்திற்கு பாத்தியப்பட்ட நஞ்சை, புஞ்சை, மாவிடை, மரவிடை, திட்டு திரல் விடை இவையாவையும் நெடுஞ்செழியர் பராந்தக பாண்டியராஜாக்களின் பட்டயங்களின் படி மடத்தார் வாரிசுதாரர்கள் ஆதாயம் பெற்று அவர்கள் குல ஆச்சாரப்படி இம்மடத்தை பூஜித்து பரிபாலனம் செய்து வரவும், இம்மடபுரத்தில் அவர்களின் குல வழக்கப்படி பள்ளிபடை சமாதுகள் வைத்து வழிபட கர்ண பரம்பரை பாத்தியதை உண்டு. பிற குலத்தார் யாவருக்கும் எவ்வித பாத்தியதையும் இம்மடத்தில் இல்லை என கூறப்பட்டுள்ளது. விஜயநகர பேரரசர்கள் தேவமாகராயா மல்லிகார்சுனராயர், வெங்கடபதிராயர், விருப்பாச்சிராயர், முசுகுந்தராயர், வசந்தராயர், மாதேவருவர் கிருஷ்ணராயர், ராமராயர், நரசிங்கராயர், மதுரையை ஆண்ட நாகம நாயக்கர், விசுவநாத நாயக்கர், முத்துகிருஷ்ண நாயக்கர், விஜயவீரப்ப நாயக்கர், முத்துவீரப்ப நாயக்கர், திருமலை நாயக்கர், முத்துவீரப்ப நாயக்கர், சொக்கநாத நாயக்கர், ரெங்கி கிருஷ்ணமுத்து வீரப்ப நாயக்கர், விஜயரங்க சொக்கநாதர் பெயர்களும் உள்ளன, என்றனர்.