பதிவு செய்த நாள்
26
ஆக
2020
05:08
மேட்டுப்பாளையம்: பொது போக்குவரத்து இல்லாததால், ஓணம் திருவிழாவுக்கு, பூ சப்ளை அனுப்ப முடியவில்லை. இதனால் பூக்களின் விலை குறைந்துள்ளது.ஓணம் திருவிழா, ஹஸ்தம் நட்சத்திரத்தில் துவங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை, 10 நாட்களுக்கு கேரளாவில் நடைபெறும்.
இந்த நாட்களில் தினமும், மாவேலி மன்னனை வரவேற்க, வீடுகளில் தினமும் பூக்கோலம் போடுவார்.அதற்காக பலவிதமான பூக்களை மக்கள் வாங்குவது வழக்கம். இதற்காக தமிழகம், கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களில் இருந்து, தினமும் பல டன் பூக்கள், கேரளாவுக்கு அனுப்பப்படும்.தற்போது ஊரடங்கு காரணமாக, பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் பூக்கள் கேரளாவுக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டதால், வியாபாரிகளும் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேட்டுப்பாளையம் பூ வியாபாரி முகமது இஸ்மாயில் கூறியதாவது:ஓணம் விழாவுக்கு, மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும், செண்டுமல்லி, வாடாமல்லி, சம்பங்கி, அரளி, மல்லிகை முல்லை ஆகிய மூன்று டன் பூக்கள், கேரளாவுக்கு தனி வாகனங்களில் அனுப்பி வந்தோம்.பஸ் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் கேரளாவுக்கு, அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கோவில்களுக்கும், திருமண நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே, இங்கிருந்து, 250 லிருந்து, 300 கிலோ பூக்களை, காய்கறி லாரிகள் வாயிலாக அனுப்பி வருகிறோம்.கடந்த காலங்களில், ஓணம் திருவிழாவின் போது, ஒரு கிலோ அரளி 220 ரூபாய், மல்லிகை, 550, முல்லை, 400, சம்பங்கி, 200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தற்போது ஒரு கிலோ அரளி, 80 ரூபாய்க்கும் மல்லிகை, 250, முல்லை, 200, சம்பங்கி, 70 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.திருவிழாக்கள் ஏதும் நடைபெறாததால், பூக்களின் தேவை குறைந்துள்ளது. இருந்தபோதும் விலையில் ஏற்றம் இல்லாமல், மந்தமாகவே விற்பனை ஆகிறது. இவ்வாறு, இஸ்மாயில் கூறினார்.