நுாற்றாண்டு கண்ட அய்யனார் கோயில் சுடுமண் சேமக்குதிரை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஆக 2020 10:08
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே லாந்தை அய்யனார் கோயிலில் உள்ள சுடுமண்ணால் செய்யப்பட்ட சேமக்குதிரைகள் 100 ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக காட்சியளிக்கின்றன. இதுபோன்று வேறு எங்கும் காண்பது அரிது, என கீழக்கரை தொல்லியல் ஆய்வாளர் உ.விஜயராமு தெரிவித்தார்.அவர் கூறியது:
கிராமங்களில் மக்கள்காவல் தெய்வமாக வணங்கும் அய்யனாருக்குவாகனமாக சேமக்குதிரைகள் செய்துவைப்பர். நேர்த்திக்கடனாக சிறிய மண் குதிரைகளையும் செய்து வைப்பர்.இந்த மண் குதிரைகள்நீண்ட காலம் நிலைத்து இருப்பதற்காக இரும்பு கம்பிகளைக் கொண்டு உள்ளீடு செய்து சிமென்ட் ஜல்லி கலவைகளால் குதிரையை உருவாக்குவர்.அப்படி செய்தாலும் அவை சிதிலமடைந்து பராமரிப்பு செய்யும் நிலை ஏற்படுகிறது.
ராமநாதபுரம் அருகே லாந்தை கிராமத்தில் விலாங்காருடைய அய்யனார் கோயிலில் சேமக்குதிரைகள் மண்ணால் மட்டுமே உருவாக்கப்பட்டவை. தற்போதும்நுாறு ஆண்டுகளை கடந்து இவை கம்பீரமாக தோற்றம் அளிக்கிறது. பழங்கால வரலாற்றை அறிய அகழாய்வில் கண்டறியப்படும் மண்பாண்டங்களே உதவுகின்றன. அந்த வகையில் பல நுாறு ஆண்டுகளாக இந்த மண் குதிரைகள் நிலைத்திருப்பதாக உள்ளது. இக்குதிரைகளை மண் வினைஞர்களான வயிரவனேந்தல் சாத்தையா, உரத்துார் நாகலிங்கம், லாந்தை உடையார் மற்றும் அங்குள்ள மண் வினைஞர்கள் சேர்ந்து உருவாக்கி உள்ளனர். இக்குதிரைகள் இவ்வூருக்குள் செல்வோரின் கண்களை கவர்வதுடன் மன அமைதி ஏற்படுத்துகிறது. ஊரின் அடையாளமாக காட்சியளிக்கின்றன, என்றார்.