மதுரை: மேலுார் நரசிங்கம்பட்டி கிராம பெருமாள் மலை அடிவாரத்தில் 300 ஆண்டுகளுக்கு முன் கட்டிய ராமாயண தொடர் ஓவியங்கள் நிரம்பிய சித்திர சாவடி மேற்கூரை சிதிலமடைந்துள்ளது. அழிவின் விளிம்பில் இருந்து தொல்லியல் துறை பாதுகாக்க ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். கீழடி, கொந்தகையில் அகழாய்வு நடக்கும் நிலையில் மதுரையை சுற்றி பழங்கால பானைகள், அணிகலன்கள், கல்வெட்டுக்கள், ஈமக்காடுகள், நெடுங்கற்கள் அதிகளவில் கிடைக்கின்றன. அந்த வரிசையில் நரசிங்கம்பட்டி சித்திர சாவடிபாரம்பரிய கட்டடங்களில் ஒன்றாக திகழ்கிறது.
தொல்லியல் ஆய்வாளர் காந்தி ராஜன் கூறியதாவது: நாயக்கர் காலத்தில் கோயில்களை விரிவாக்கம் செய்து மண்டபங்கள் கட்டிய போது சித்திர சாவடி கட்டியிருக்கலாம். இதில் ராமாயண தொடர் ஓவியங்கள் வரைந்திருப்பது கூடுதல் சிறப்பு. 16ம் நுாற்றாண்டின் விஜயநகர பேரரசு காலத்தில் இருந்து இதுபோன்ற ஓவியங்கள் கிடைக்கின்றன. அழகர்கோவில் வசந்த மண்டபம், ராமநாதபுரம் மற்றும் போடி அரண்மனை, புதுக்கோட்டை கோயில்களில் ராமாயண தொடர் ஓவியங்கள் உள்ளன.உலர் சுவரில் டெம்ப்ரா, ஈர சுவரில் பிரஸ்கோ முறையில் ஓவியம் வரைவர். மூலிகை ஓவியம் காலப்போக்கில் அழியும் என்பதால் இந்த சாவடியில் மண், கல்லில் எடுத்த வண்ண பொடி கொண்டு டெம்ப்ரா ஓவியம் வரைந்துள்ளனர். இதை புதுச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் ஆவணம் செய்துள்ளது. வரலாற்று சிறப்புள்ள சித்திர சாவடியை புனரமைத்து ஓவிய அளவுகளை டிரேசிங் செய்து பழமை மாறாமல் புதுப்பிக்க தொல்லியல் துறை முன்வர வேண்டும் என்றார்.