பதிவு செய்த நாள்
02
செப்
2020
10:09
சென்னை : சென்னையில், பிரசித்தி பெற்ற வடபழநி முருகன் கோவிலில், வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, இன்று(செப்.,2) முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஊரடங்கு தளர்வுக்கு பின் வடபழனி முருகன் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
சென்னையில், பிரசித்தி பெற்ற வடபழநி முருகன் கோவிலில், வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, இன்று(செப்.,2) முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. சென்னை, வடபழநி முருகன் கோவில், பழநிக்கு நிகராக போற்றப்படுகிறது. இக்கோவில், சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்குகிறது.சிறு ஓலைக் கொட்டகையில் துவக்கப்பட்ட வடபழநி கோவில், பல்வேறு காலக்கட்டங்களில், பிரமாண்ட வளர்ச்சி பெற்றது. கடந்த, 2007ல், கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
அனுமதி: கடந்த, 13 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, கடந்த மார்ச் மாதம், 11, 12ம் தேதிகளில், பாலாலய விழா நடந்தது.ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, ஐந்து மாதங்களாக, பக்தர்கள் தரிசனத்திற்கு, அரசு அனுமதி மறுக்கப்பட்டது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் முதல், மீண்டும், பக்தர்கள் தரிசனத்திற்கு கோவில்களை திறக்க, அரசு அனுமதி வழங்கியது.
இந்நிலையில், தொற்று தடுப்பு நடவடிக்கை மற்றும் கோவிலின் பிரதான வாசலில், மாநகராட்சியின் மழை நீர் சேகரிப்பு பணி நடந்ததால், இன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது. தினமும் காலை, 7:00 மணி முதல், காலை, 11:00 மணி வரையும், மாலை, 5:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரையும், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும். 10 வயதிற்கு உட்பட்ட, 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை.அறநிலையத்துறை அறிவுரைப்படி, கோவில் அலுவலகத்தின் பின்புறம், இலவச காலணி பாதுகாப்பகத்திற்கு எதிரில், தரிசனத்திற்கான அனுமதி சீட்டு வழங்கப்படும்.பக்தர்கள், தெற்கு நுழைவு வாயில் வழியாக உள்ளே நுழைந்து, மூலவரை தரிசித்து, கிழக்கு வாயில் வழியாக, வெளியில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது.
கோவிலில், கும்பாபிஷேகத்திற்காக பாலாலயம் செய்யப்பட்டு உள்ளதால், பக்தர்கள் மூலவர் தரிசனத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர்.கலர் கூப்பன்ஒவ்வொரு கால பூஜைக்கு, ஒரு கலர், கூப்பன் வழங்கப்படும். குறிப்பிட்ட அளவு பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர். பக்தர்கள் தரிசனத்தின் முதல் நாளான இன்று காலை, மூலவருக்கு ராஜ அலங்காரமும், மாலை சந்தன காப்பும் சார்த்தப்படுகிறது.
வடபழநி முருகன் கோவிலில், பக்தர்களுக்கு ஒரு வார காலத்திற்கான அனுமதி சீட்டை, மொபைல் போன், ஆதார் எண்ணை கொடுத்து, பெற்றுக் கொள்ளலாம்.மேலும், https://tnhrce.gov.in/eservices/dharshanbooking_index.php?tid=6&catcode=6 என்ற இணையதள முகவரி மூலம் அனுமதி சீட்டு வழங்கப்படும்.ஒரு நபருக்கு, நான்கு அனுமதி சீட்டு மட்டுமே வழங்கப்படும்.