பல்லடம்: நவக்கிரகங்களான ராகு, மற்றும் கேது இருவரும், ஒவ்வொரு ஆண்டும் தாங்கள் இருக்கும் ராசியிலிருந்து பின்னோக்கி பெயர்ச்சி அடைகின்றனர். இன்று மதியம் 2.20க்கு ராகு பகவான் மிதுன ராசியிலிருந்து ரிஷப ராசிக்கும், கேது பகவான் தனுசு ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சி அடைந்தனர்.
பல்லடத்தை அடுத்த சித்தம்பலம் நவகிரக கோட்டையில், ராகு கேது பெயர்ச்சி விழா நடந்தது. காலை 6 மணி முதல் 1008 தீர்த்த கலச அபிஷேகம், மற்றும் லட்சார்ச்சனை விழா நடந்தது. பரிகார ராசிகளுக்கான வழிபாடுகள், மற்றும் உலக நலன் கருதி மஹா வேள்வி வழிபாடும் நடந்தது. காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் பங்கேற்று, வேள்வி, மற்றும் லட்சார்ச்சனை விழாவை நடத்தினார். அபிஷேக ஆராதனைகளை தொடர்ந்து, மதியம், 2.20க்கு, சிறப்பு அலங்காரம் நடந்தது. ராகு கேது உற்சவ மூர்த்திகளின் திருவீதி உலாவும், இதையடுத்து, அம்மையப்பருடன் ராகு கேதுக்கள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வினியோகிக்கப்பட்டது.