பதிவு செய்த நாள்
02
செப்
2020
11:09
திருப்பூர்:கோவில்கள் திறந்துள்ளதால், மனக்கவலை நீங்கிவிட்டது; அளப்பரிய ஆனந்தத்துடன், கொரோனா அச்சத்தை, இறைவனின் பாதத்தில் கொட்டிவிட்டோம் என, பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.உலகை ஆட்டிப்படைத்து கொண்டிருந்த கொரோனா தொற்றால், அனைவரின் இயல்பு வாழ்க்கையும் பாதித்தது. மக்களுக்கு அருள்பாலித்துக்கொண்டிருந்த கோவில்களும் மூடப்பட்டன; தினப்படி பூஜை நடந்தாலும், பக்தர்கள் கண்ணாரக்கண்டு, இறைவனை தரிசிக்க இயலவில்லை.
இப்படியே, 165 நாட்கள் வீணாக கழிந்த நிலையில், நேற்று முதல் தமிழகத்தில் உள்ள வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. கோவில், சர்ச், மசூதி வளாகங்கள் துாய்மை செய்யப்பட்டு, நேற்று வழக்கம் போல் வழிபாடும், ஆராதனையும், தொழுகையும் நடந்தன.பல்வேறு தளர்வுகள் வழங்கினாலும், இறைவனை தரிசனம் செய்துள்ள இந்நாளில் இருந்துதான், உலக மக்களுக்கு விடிவு பிறக்குமென, பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
சிவசுப்பிரமணியம், அவிநாசி. கோவில்களில் பக்தர்களை அனுமதிக்காமல் மூடியிருந்தது, மிகவும் வெறுமையாக இருந்தது. கோவில் திருக்கதவுகள் திறக்கப்பட்டதால், உலகத்துக்கே விடிவு பிறந்துள்ளது. இறைவனை தரிசிப்பதில் மகிழ்ச்சி; இனி, கொரோனா குறித்து யாரும் கவலைப்பட மாட்டோம்; இறைவனே தற்காத்துவிடுவார்.
மகேஷ்வரன், சோமனுார்.மனிதனாக பிறந்தவர், தினமும் தாய், தந்தையை வழிபட வேண்டும்; பிறவிதோறும் அம்மை அப்பரை வழிபட வேண்டும். கோவிலில் தரிசனம் இல்லாதது, மன அழுத்தத்தை உருவாக்கியிருந்தது; தற்போது ஆடல்வல்லானை அவிநாசியில் தரிசனம் செய்த பிறகுதான், ஆனந்தமாக இருக்கிறது. ஈசனை வழிபட வழிபட அனைத்துவித பாதிப்பும் அகலும்.சந்திரசேகர், பொங்கலுார்.சென்னையில் இருந்து, குடும்ப நிகழ்ச்சிக்காக பொங்கலுார் வந்திருந்தேன்; இங்கேயே மூன்று மாதமாக தங்கிவிட்டேன்.
கோவில் திறந்ததால், பெரிய விமோஷனம் கிடைத்துள்ளது. பக்தர்கள் அளப்பரிய ஆனந்தத்தை பெற்றுள்ளனர்; கொரோனா அச்சத்தை, இறைவனின் பாதத்தில் வைத்துவிட்டோம்.முருகன், திருப்பூர்.மனம் கவர்ந்த உறவினரை, நீண்ட நாள் கழித்து காண்பது போல், இறை தரிசனத்தால் மனம் நிறைந்துள்ளது. திருப்பூரில், மூலவரை தரிசனம் செய்தது, ஆத்ம திருப்தியாகவும், பரம சந்தோஷமாகவும் இருக்கிறது. இறையாற்றல், இன்னலில் இருந்து உயிர்களை காக்கும்.சாந்தி, வீரபாண்டி.குடும்பத்தில் சிறிய கவலை வந்தாலும், ஓடிச்சென்று சுவாமியிடம் தான் கூறுவோம்; அவரும் தயவு காட்டுவார். நீண்ட நாட்களுக்கு பிறகு, கோவில் திறக்கப்பட்டதால், முதல் வேலையாக இறைவனை வழிபட்டு, உலகை கொரோனாவிடம் இருந்து காக்க வேண்டும் என்றுதான் மனதார பிரார்த்தனை செய்துள்ளேன்.பாலசரஸ்வதி, பாளையக்காடு.வீடுகளில் எவ்வளவு தான் சுவாமிக்கு பூஜை செய்தாலும், கோவில் பிரகாரத்தை சுற்றி வருவது போன்ற மனநிறைவு கிடைக்காது. வீரராகவ பெருமாள் மற்றும் விஸ்வேஸ்வரர் கோவிலை சுற்றிவந்து வழிபட்டாலே, கொரோனா வைரஸ் அழிந்துவிடும்.