இறைவா... சக்தி கொடு! கோவில்கள் திறப்பு : சமூக இடைவெளி கடைபிடித்த பக்தர்கள்
பதிவு செய்த நாள்
02
செப் 2020 01:09
வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டதால், பொள்ளாச்சி, உடுமலையில் உள்ள கோவில்கள் நேற்று திறக்கப்பட்டு, சமூக இடைவெளி பின்பற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர். தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டு, தினமும் பூஜைகள் நடத்த மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.கடந்த மாதம், 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக வருவாய் உள்ள கோவில்களை திறக்க அரசு உத்தரவிட்டது. மற்ற கோவில்களும் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் பக்தர்கள் காத்திருந்தனர்.இந்நிலையில், இம்மாதம் முதல் கட்டுப்பாடுகளுடன் அனைத்து கோவில்களையும் திறக்க அரசு உத்தரவிட்டது. இதனால், நேற்றுமுன்தினம் கோவில்களில் கிருமிநாசினி தெளிப்பு மற்றும் துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பக்தர்கள் சமூக இடைவெளியுடன் நிற்பதற்காக வெள்ளைக்கோடு வரையப்பட்டது.பொள்ளாச்சி பகுதியில் உள்ள கோவில்களில், வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்ட தையடுத்து, நேற்று, பக்தர்கள் ஆர்வமாக சென்று, சமூக இடைவெளியை பின்பற்றி, இறைவனை வழிபாடு செய்தனர்.
கோவில்களில் காலை, 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. அதன்பின், பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்பட்டனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பின், கிருமிநாசினி வழங்கி கைகளில் தடவிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். கால்களை கழுவிய பின், கோவிலுக்குள் செல்ல அனுமதி அளித்தனர். பக்தர்கள், 20 பேராக உள்ளே அனுமதிக்கப்பட்டு வழிபாடு செய்தனர். பக்தர்கள் கூறுகையில், ஆறு மாதங்களாக கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தது. தற்போது, கோவிலுக்கு வந்து இறைவனை தரிசனம் செய்த பின், நிம்மதியாக இருக்கிறது. கொரோனா தொற்று நீங்கி, அமைதி திரும்ப வேண்டுமென, வேண்டுதல் வைத்துள்ளோம், என்றனர்.
உடுமலை: உடுமலை திருமூர்த்திமலையில், மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள, அமணலிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று முகக்கவசம் அணிந்து வந்த பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். உள்ளே நுழைந்ததும், கோவில் ஊழியர்கள், தெர்மல் ஸ்கேனர் மூலம், வெப்ப அளவு பரிசோதித்தனர். சானிடைசர் வழங்கப்பட்டு, கைகள் சுத்தம் செய்ய தனியாக தண்ணீர் வசதி செய்து, கால்களை கழுவி வர அறிவுறுத்தப்பட்டது. சுவாமிக்கு தீபாராதனை செய்யப்பட்டு, வழிபட அனுமதியளிக்கப்பட்டது. பூஜை பொருட்கள் கொண்டு வர அனுமதிக்கவில்லை. கவர்களில் வைக்கப்பட்டிருந்த, திருநீறு பிரசாதத்தை பக்தர்கள் எடுத்துச்சென்றனர்.அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள, அனைத்து கோவில்களிலும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அருவிக்கு செல்ல தடைதிருமூர்த்திமலையில், மலைமேல், 930 மீட்டர் உயரத்தில், பஞ்சலிங்கம் அருவி உள்ளது. ஊரடங்கு காரணமாக, பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. தற்போது கோவில்கள் மட்டும் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டு, சுற்றுலா தலங்கள் திறக்க அனுமதியில்லை. மலை மேலுள்ள பஞ்சலிங்கம் அருவிக்கு, பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கவில்லை.
வால்பாறை: வால்பாறை நகராட்சி சார்பில் கோவில்களில், கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. சுப்ரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களின் கைகளுக்கு சானிடைசர் தெளிக்கப்பட்டது. கைகளை நன்றாக சுத்தம் செய்த பின், சுவாமி தரிசனத்துக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஐந்து மாத இடைவெளிக்கு பின், கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ததால், பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர். -- நிருபர் குழு -
|