அன்னையே உன்னை தரிசிக்க புண்ணியம் செய்தோம்* பெண்கள் மகிழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02செப் 2020 02:09
விருதுநகர்: மனச்சோர்வு, மனஉளைச்சல், மனபாரம் எல்லாவற்றிற்கும் மாமருந்து கடவுள் பக்தி. கோயிலில் நுழையும் போது மனப்பூட்டு கழன்று எதிர்மறை சிந்தனைகள் விடுபடும். சர்வமும் நீயே… என்று மனசு சரணாகதி அடையும். கோயில் சென்று சுவாமி ,அம்மனை ஐந்து மாதங்களாக தரிசிக்காமல் மூச்சு முட்டி கிடந்த பக்தர்களின் வேண்டுதலுக்கு கடவுள்கள் செவிசாய்த்து விட்டனர் . இதன் சந்தோஷத்தை பக்தர்கள் பகிர்ந்து கொண்டனர்.
உலகமே நலமுடன் வாழும்: 5 மாதத்திற்கு பிறகு கோயில்கள் திறக்கபட்டு ஆண்டாளை தரிசனம் செய்தது மனதிற்கு மிகுந்த உற்சாகம், சந்தோசம், மனநிறைவை தந்தது. உலகில் எல்லா ஜீவராசிகளும் நோயில்லாமலும் கஷ்டமில்லாமலும் நன்றாக வாழவேண்டுமென பிரார்த்தித்தேன். அரசின் அறிவுறுத்தல்களை கடைபிடித்து முகக்கவசம், சமூக இடைவெளியை கடைபிடித்து தரிசனம் செய்தேன். – விஜயலட்சுமி, ஸ்ரீவில்லிபுத்துார்
மனதிற்கு நிம்மதி கிடைத்தது: கோயில்கள் திறக்கப்பட்டிருப்பது மனதிற்கு சந்தோசமாக உள்ளது. என்ன தான் வீட்டில் விளக்கேற்றி சுவாமி கும்பிட்டாலும் குடும்பத்தினருடன் கோயிலுக்கு வந்து சுவாமி கும்பிடும் போது ஏற்படும் மனதிருப்திக்கு அளவே இல்லை. நேர்ந்ததும் நிறைவேறும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. கோயில் திறக்கப்படாமல் ஊரே களையிழந்து இருந்தது . தற்போது தான் கண்ணுக்கு நிறைவாக உள்ளது. ஆர்வமுடன் பக்தர்கள் பலரும் நேர்த்திக்கடனை செலுத்தியது நெகிழ்வான நிகழ்ச்சியாகும். எனது மனதிற்கு பிடித்த அம்மனான பத்திரகாளியம்மனை வணங்கியது மனநிறைவை தந்தது.– கோமளவல்லி, குடும்பத்தலைவி, சாத்துார்.