கம்பம்: கம்பத்தைச் சேர்ந்த முத்துக்குமார் 25, கோயில்களில் சுவாமி, அம்மன் அலங்காரம் செய்கிறார். இறைப்பணி முழு மனநிறைவு தருவதாக கூறுகிறார்.
கம்பம் போர்டு ஸ்கூல் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் 11 வது வயதில் பட்டுக்கோட்டை பெருமாள் கோயிலிற்கு சென்ற போது சுவாமி அலங்காரம் செய்வதில் நாட்டம் ஏற்பட்டது. சீத்தாராமைய்யர் என்பவர் இவருக்கு அலங்காரம், ஆகம விதிகளை கற்றுக்கொடுத்துள்ளார். பிளஸ் 2வில் வறுமையால் படிப்பை தொடர முடியவில்லை. மீண்டும் பட்டுக்கோட்டைக்கு சென்று 2 ஆண்டுகள் அதே கோயிலில் உதவியாளராக பணி செய்தார். பின்னர் கம்பம் ஆதிசக்தி விநாயகர் கோயிலில் உதவியாளராக சேர்ந்தார். உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயிலில் நீலகண்ட சாஸ்திரிகளிடம் உதவியாளராக பணியாற்றினார். சிவஆகம விதிகள், அலங்காரம் தொடர்பாக அவர் கற்றுக்கொடுத்தார். அப்பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ளார். தற்போது விழாக் காலங்களில் கம்பம் சுற்றுப்பகுதி கோயில்களில் அலங்காரம் செய்கிறார்.
முத்துக்குமார் கூறியதாவது:2004 ல் இருந்து அலங்காரப்பணி செய்கிறேன். அம்மனுக்கு சந்தனகாப்பு மற்றும் புஸ்பங்கி சேவை அலங்காரங்கள் சிறப்பானவை. சுவாமிக்கு விபூதி காப்பு அலங்காரம் சிறப்பாக இருக்கும். மிகவும் எளிமையான அலங்காரம் விநாயகருக்கு மட்டுமே. முழு மனநிறைவை தரும் அலங்கார இறைப்பணியே இனி எனது வாழ்நாள் பணியாக இருக்கும், என்றார். தொடர்புக்கு 63813 53242