இலங்கை மன்னான இராவணேஸ்வரன் பல்லாண்டுகள் தவம் செய்து பெற்ற வரத்தின் பலனாக மமதை கொண்டு தேவர்களைத் துன்புறுத்தினான். அவனது தம்பியான கும்பகர்ணன் தானும் பல்லாண்டுகள் தவமிருந்து மும்மூர்த்திகளிடமிருந்து வரம் பெற்ற போது தேவர்கள் இவனுடைய ஆற்றலைக் கண்டு அஞ்சி சரஸ்வதியைத் தஞ்சமடைந்தனர். தேவேந்திரனும், இராவணனை விட பல மடங்கு உருவில் மற்றும் சக்தியில் பெரியவனான கும்பகர்ணன் ஏதாவது வரம் பெற்றால் தனக்கு அபாயம் என்று கருதி சரஸ்வதியிடம் கும்பகர்ணனின் வரத்தை எப்படியாவது தடுக்க வேண்டுதல் செய்கின்றான். அவளும் தேவர்களுக்கு அபயமளித்து அவர்களைக் காப்பாற்ற முனைந்தாள். கும்பகர்ணன் முன் தோன்றிய பிரம்மா அவனிடம் என்ன வரம் வேண்டுமென்று கேட்க அவனோ சாகா வரமான நித்யத்துவம் வேண்டும் என்று கேட்க நினைத்தான். அப்பொழுது சரஸ்வதி அவன் நாக்கில் அமர்ந்து நித்ரத்துவம் வேண்டும் என்று மாற்றி கேட்டுவிட்டான். பிரம்மனும் அப்படியே ஆகட்டும் என்று வரமளித்துச் சென்று விட்டார். அட்சரம் பிசகியதால் அழியாத வாழ்வுக்கும் பதில் அசைக்க முடியா உறக்கம் பெற்றான் கும்பகர்ணன். அதன் பின்னர் வாழ்நாள் முழுவதும் தூங்கினால் எவ்வாறு என்று மன்றாடி ஆறுமாதம் உறக்கம். ஆறு மாதம் விழிப்பு என்று அந்த வரம் மாற்றப்பட்டது என்கிறது வரலாறு.