பதிவு செய்த நாள்
21
மே
2012
03:05
சாதனைகள் நிகழ்த்த நம்பிக்கையே அடிப்படை. ஆன்மிக சாதனையாயினும், எதுவாயினும் இதுவே விதி. நம்பிக்கை இல்லாமல் இருந்தால் எதையுமே செய்ய முடியாது. அதனால் தான், உங்களுக்கு கடுகளவு நம்பிக்கை இருந்தால் கூட, மலையை நகர்த்தி விடலாம் என்கின்றன அறநூல்கள். தெளிவற்ற முடிவுகள் நம்பிக்கையின் அடிப்படையைத் தகர்த்துவிடும். எனக்கு வேண்டியது இதுவே. என்ன நடந்தாலும் சரி, அதை அடையும் வரையில் ஓயமாட்டேன். இது எனக்கு மிக முக்கியம், என்ற மனத்திண்மை இருந்தால் தான், உங்களது செயல்கள் வெற்றி பெறும். இதற்கு ஓர் எளிய உதாரணம் பிரபல நடிகர் சார்லி சாப்ளின். சார்லி சாப்ளின் அமெரிக்காவின் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தார். ஓரிடத்தில் போட்டி நடந்தது. சார்லி சாப்ளினை போல வேடமிட்டு நடிக்கும் போட்டி அது. குறும்பு பிரியரான சாப்ளினும் வேறொரு பெயரில் அதில் கலந்து கொள்ள மனு கொடுத்தார். போட்டியின் முடிவு அதிர்ச்சியை அளித்தது. உண்மையான சார்லி சாப்ளின் அதில் மூன்றாம் பரிசுக்கு உரியவராக தேர்ந் தெடுக்கப்பட்டார். இதில் ஆச்சர்யப்பட்டால் மட்டும் போதாது.
மதுரைத் தமிழ்ச்சங்கம் சார்பாக ஒரு கவிதைப் போட்டி நடந்தது. அதில் பாரதியார் கலந்து கொண்டார். அப்போது அவர் மக்கள் மத்தியில் பிரபலமாகாத காலகட்டம். அதற்கு புகழ்பெற்ற, செந்தமிழ் நாடென்னும் போதினிலே என்ற கவிதையை போட்டிக்கு அனுப்பியிருந்தார். அதைப் படித்துப் பார்த்த நடுவர்கள், யார் இந்தக் கவிஞன். இப்படி எல்லாருக்கும் புரிவது போல எளிமையாக எழுதி இருக்கிறார். இதனால், கவிதையின் தரம் தாழ்ந்துவிட்டது, என்று அங்கலாய்த்துக் கொண்டார்கள். பதம் பிரித்து பிரித்தே பொருள் தெரிந்து கொள்ளும் விதத்தில் கவிதை கஷ்டமானதாக இருக்க வேண்டும் என்ற அபிப்ராயம் இருந்த காலகட்டம் அது. போனால் போகிறதென்று அந்தக் கவிதைக்கு மூன்றாம் பரிசைக் கொடுத்தார்கள். இதற்காக அவர் சோர்ந்து விட வில்லை. முதல் இருபரிசுகளைப் பெற்ற கவிதைகள் எதுவென்றே நமக்கு தெரியாது. அந்த பரிசுகளை நிர்ணயம் செய்த நடுவர்களும் காலத்தோடு கலந்து காணாமல் போய்விட்டார்கள். ஆனால், செந்தமிழ் நாடென்னும் போதினிலே பாட்டும், அதை எழுதிய மீசைக்கவிஞன் பாரதியும் காலம் கடந்து இன்றும் வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
உங்கள் நம்பிக்கையில், உண்மையான உறுதி இருக்கிறதா என்று பார்ப்பதற்கு சோதனைகள் தேடி வரும். கொடிக்கம்பம் அல்லது தொலைபேசி கம்பத்தை தரையில் நாட்டுவது எப்படி தெரியுமா? குழியைத் தோண்டி அதில் நட்டு, அத்துடன் விட்டுவிட்டால் போதாது. அப்படி செய்தால், அது சாய்ந்து விடும். அதை வலுப்படுத்த சுற்றிலும் கற்களைப் போட்டு, சம்மட்டியால் தட்டி நன்கு கெட்டிக்க வேண்டும். அதன்பிறகு அது அசைந்தால், மேலும் இறுக்குவதற்குரிய வழியை செய்ய வேண்டும். ஒரு கம்பம் அசையாமல் நிற்பதற்கே சம்மட்டியால் இத்தனை அடிவாங்குகிறது! வாழ்க்கையும் அவ்வாறே! உங்கள் செயல்கள் நிறைவேறும் வகையில், நீங்கள் சிரமங்களைச் சந்தித்தே ஆக வேண்டும்!
ஒரு செயலின் மூலம், ஆண்டவன் உங்களை நிமிர்த்த முயலுகின்றான். சம்மட்டி என்னும் சோதனைகளால் தட்டினால் ஒழிய, நீங்கள் உறுதியாகவும், நேராகவும் நிற்கமாட்டீர்கள். ஆகையால், அடியைத் தாங்க அஞ்ச வேண்டாம். உங்கள் மீது நீங்கள் முழுநம்பிக்கை வையுங்கள். அச்சத்துக்கு அருகில் கூட செல்ல வேண்டாம். எது நடக்க வேண்டுமோ, அது நடக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சரி, நடப்பது நடக்கட்டும். நான் தைரியமாக இருக்கிறேன். அதைக் கண்டு அஞ்சுவதால் என்ன பயன்? நடப்பது நடக்கட்டும், என நினையுங்கள். எனக்கு வேண்டியது இதுவே. என்ன நடந்தாலும் சரி, அதை அடையும் வரையில் ஓயமாட்டேன். இது எனக்கு மிக முக்கியம், என்ற மனத்திண்மை இருந்தால் தான், உங்களது செயல்கள் வெற்றி பெறும். செயல்பாடுகளில் கவனமாக இருங்கள். உலகம் உங்கள் கையில் என்பது உறுதி!
மாணவர்களே தேர்வில் உங்கள் மதிப்பெண் குறைந்தாலும் முதலிடம் போய்விட்டது என்றாலும் பதறவேண்டாம். வெறும் மதிப்பெண்கள் வாழ்க்கையை தீர்மானிக்காது. மனம் பதறும் போது, பெற்றோரின் முகத்தை நினைவில் கொண்டு வாருங்கள். அடுத்த முறை வெற்றி நிச்சயம் பெறலாம். என்றும் இறைவன் உங்களுக்கு துணை இருப்பார்.