பதிவு செய்த நாள்
13
செப்
2020
02:09
கம்பம்: மண்டல, மகரவிளக்கு சீசனில் சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு, நிலக்கல்லில் கொரோனா பரிசோதனை செய்ய, தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில், மண்டல கால, மகரவிளக்கு பூஜைகள் நவ., 15ல் துவங்கி, இரண்டு மாதங்கள் வரை நடைபெறும்; லட்சக்கணக்கில் பக்தர்கள் திரள்வர்.கொரோனா வைரஸ் காரணமாக, இந்தாண்டு முன்னேற்பாடுகள் குறித்து, விரிவாக ஆலோசித்து முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சீசனில் வரும் பக்தர்களுக்கு, நிலக்கல்லில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, தொற்று இல்லை என்றால் மட்டுமே அனுமதிப்பது என, முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு எத்தனை பேருக்கு பரிசோதனை எடுக்க முடியும் என்பது தொடர்பாக, சுகாதாரத் துறையிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது. கடந்த காலங்களில், 18ம் படி வழியாக, ஒரு மணி நேரத்தில், 5,000 பக்தர்கள் சென்றனர்.இந்தாண்டு, அந்த எண்ணிக்கையை குறைக்க தீர்மானிக்கப் பட்டுள்ளது. 18 படிகளில் ஏற, உதவிக்கு போலீசார் இருக்க மாட்டார்கள். பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, அவர்களாகவே ஏறிச் செல்ல வேண்டும்.