அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே ராமானுஜபுரத்தில் 17 ம் நுாற்றாண்டை சேர்ந்த சதிக்கல் கண்டுபிடிக்கப்பட்டது.
போரில் வீர மரணம் அடைந்த வீரனின் மனைவி தீ மூட்டி உயிரை மாய்த்து கொள்ள உடன்கட்டை ஏறும் நிகழ்விற்குசதி என்று பெயர். கணவன், மனைவி இருவரின் நினைவை போற்றும் வகையில் அவர்களது உருவங்களை சிற்பமாக செதுக்கி பொதுமக்கள் வழிபாடு செய்வர்.அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்லுாரி வரலாற்று துறை உதவி பேராசிரியர் விஜயராகவன் கூறியதாவது: ராமானுஜபுரத்தில் உள்ள சதிக்கல் ஏறுதழுவலின் (ஜல்லிக்கட்டு) போது இறந்த வீரனின் சிற்பமாகும்.வீரனின் தலையின் பின்புறம் கொண்டை, காதுகளில் அணிகலன்கள் உள்ளன. புஜங்களில் தோள் வளையம் உள்ளது.
இடதுகரத்தில் உள்ள குத்துவாள் மேல்நோக்கி உள்ளது. சிற்பத்தின் கீழே ஏறுதழுவலின் அடையாளமாக இரண்டு மாடுகள் செதுக்கப்பட்டுள்ளன.வீரனின் அருகில் பெண் சிற்பம் உள்ளது. அந்த பெண் சதி மேற் கொண்டதன் அடையாளமாக வலது கைஎல் வடிவம் போன்று உயர்ந்துள்ளது.பெண் அணிகலன்கள் அணிந்துள்ளார்.பெண் அருகே சிறய அளவில் ஆன பெண் சிற்பம் கையில் மங்கல பொருட்களுடன் நிற்பது போல் செதுக்கப்பட்டுள்ளது. அவரை வான் உலக மங்கையர் என்று அழைப்பர். இறந்த வீரரை இருகரம் கூப்பி வானுலகம் அழைத்து செல்வர் என்ற நம்பிக்கையில் செதுக்கப்பட்டுள்ளது. இந்த சதிக்கல்லை கல்வீரம்மன் என வழிபடுகின்றனர். மாசி சிவராத்திரி,சித்ரா பவுர்ணமியில் சிறப்பு வழிபாடு நடத்துவர், என்றார்.