பதிவு செய்த நாள்
14
செப்
2020
06:09
மகாளய அமாவாசையன்று திருநெல்வேலி அம்பாசமுத்திரம் காசிபநாதர் கோயிலுக்குச் சென்று முன்னோரை வழிபடுங்கள். புனிதமான தாமிரபரணி நதிக்கரையில் இக்கோயில் உள்ளது.
காஷ்யப முனிவர் யாகம் நடத்தி ஆத்மார்த்த பூஜைக்காக, சிவலிங்க வடிவம் எடுக்கும்படி சிவனை வேண்டினார். லிங்கம் ஒன்றை தோன்றச் செய்து அதற்குள் ஐக்கியமானார் சிவன். மூலவரான இவரையே ‘காசிப நாதர்’ என அழைக்கின்றனர். .
ஒருமுறை மன்னர் ஒருவர் நோய் தீர இங்கு வழிபட்டார். அப்போது, ‘‘எள்ளால் பொம்மை செய்து அந்தணருக்கு தானம் கொடுத்தால் நோய் தீரும்’’ என அசரீரி ஒலித்தது.
கன்னட அந்தணர் ஒருவர் பொம்மையை பெற்றுக்கொள்ள மன்னர் குணம் பெற்றார். அந்தணருக்கு ரத்தினங்களை பரிசளித்தார் மன்னர். அப்போது உயிர் பெற்ற பொம்மை, அந்தணரிடம் உள்ள காயத்ரி மந்திர சக்தியை அளித்தால் நோயிலிருந்து அந்தணர் விடுபடலாம் என்றது. குணம் பெற்ற அந்தணர், பரிசாக பெற்ற செல்வத்தை பொதுநலனுக்கு பயன்படுத்த விரும்பனார். அகத்தியரிடம் ஆலோசிக்கச் செல்வதற்கு முன், காசிபநாதர் கோயில் அர்ச்சகரிடம் பரிசை மூடையாக கட்டிக் கொடுத்து விட்டு சென்றார்.
திரும்பி வந்த அந்தணரிடம் பருப்பு மூடையைக் கொடுத்ததோடு, தான் ரத்தினம் பெறவில்லை என்று சிவன் மீது சத்தியம் செய்தார் அர்ச்சகர். கோபத்தில் அர்ச்சகரை சுட்டெரித்தார் சிவன். உயிர்ப்பிக்கும்படி சிவனை வேண்டினார் அந்தணர். பின்னர் கால்வாய் ஒன்றை ரத்தின கற்களின் உதவியுடன் உருவாக்கினார். கன்னட தேசத்தை சேர்ந்தவர் என்பதால் ‘கன்னடியன் கால்வாய்’ என அதற்கு பெயர் வந்தது. அந்தணருக்கு அருளிய எரித்தாட்கொண்டாருக்கு(சிவன்) முதலில் பூஜை நடக்கிறது.
இங்குள்ள மரகதாம்பிகை, சமுத்திரம்(கடல்) போல அருள்பாலிப்பதால் ‘அம்பாள் சமுத்திரம்’ எனப்பட்ட இத்தலம் பின்னர் ‘அம்பா சமுத்திரம்’ என்றானது. திருமாலுக்கு இங்கு சன்னதி உள்ளது. இங்குள்ள நடராஜர், ‘புனுகு சபாபதி’ எனப்படுகிறார். வியாழக்கிழமை வரக்கூடிய தைப்பூச நாளில் மட்டும் புனுகு பூஜை செய்வர். கோயிலுக்கு அருகில் தேவி, சாலா, தீப, காசிப, கிருமிகர, கோகிலம் என்னும் தீர்த்தங்கள் உள்ளன. அமாவாசையன்று இங்கு முன்னோருக்கு தர்ப்பணம் செய்கின்றனர்.
செல்வது எப்படி
திருநெல்வேலியில் இருந்து 40 கி.மீ., அம்பாசமுத்திரம். அங்கிருந்து 1 கி.மீ.,
விசேஷ நாள்: ஐப்பசி அன்னாபிேஷகம், திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி, பங்குனி பிரம்மோற்ஸவம்
நேரம்: காலை 6:00 – 11:00 மணி, மாலை 5:00 – 7:30 மணி
தொடர்புக்கு: 04634 – 253 921
அருகிலுள்ள தலம்: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் 40 கி.மீ.,