திருப்புவனம்:சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்த நிலையில் கீழடி கடல் கொண்ட நகரமா என்பதை ஆராய முதன் முறையாக தமிழக தொல்லியல் துறை சார்பில் நிலவியல் துறை பேராசிரியர்கள் மண்ணின் தன்மை குறித்த ஆய்வு பணிகளை தொடங்கியுள்ளனர்.
திருவாரூர் மத்திய பல்கலை நிலவியல் துறை பேராசிரியர் ஜெயம்கொண்ட பெருமாள் தலைமையிலான குழு கீழடியில் 13 மீட்டர் ஆழம் வரை மண்ணின் தன்மை குறித்த ஆய்விற்காக மண் மாதிரிகள் சேகரிக்கின்றனர்.பேராசிரியர் பெருமாள் கூறுகையில், கீழடி, வைகை ஆற்றின் தடத்தில் இருந்திருக்க வாய்ப்புண்டு. களிமண், ஆற்று மண், கருப்பு மண் என மண்ணின் அடுக்குகள் உள்ளன. இதில் எந்த வகை மண் கீழடியில் உள்ளது என ஆய்வு செய்யப் பட்டு வருகிறது. கடல் கொந்தளிப்பு, சுனாமி, இயற்கை பேரழிவு, போன்றவற்றால் கீழடி நகரம் அழிந்திருக்குமா அல்லது இடம் மாறி சென்றார்களா என மண்ணின் தன்மையை வைத்து ஆய்வு செய்ய உள்ளோம், என்றார்.ஆய்வு பணியின்போது தமிழக தொல்லியல் துறை இயக்குனர் சிவானந்தம், தொல்லியல் அலுவலர்கள் ஆசைத்தம்பி, பாஸ்கரன், முன்னாள் தொல்லியல் அலுவலர் சேரன், உத்தரபிரதேச டேராடூன் பல்கலை ஆராய்ச்சி மாணவி பி.எஸ்.ராய் உள்ளிட்ட பலர் இருந்தனர்.