பதிவு செய்த நாள்
19
செப்
2020
02:09
அதிகாலை நேரம். கவுசல்யா சுப்ரஜா ராமா... என, பக்கத்து வீட்டில், எம்.எஸ்., குரல் கேட்டது. வாசலில், கோவிந்தா... கோவிந்தா... என்றும் சத்தம். என்ன வேண்டும்? என்றபடியே வாசலுக்கு வந்தால், புரட்டாசி சனிக்கிழமையை நினைவுபடுத்தும் விதமாய் ஒருவர் பக்திப் பழமாய் நின்றிருந்தார்! பொதுவாக விரதம்இருப்பவர்கள், தாங்கள் மட்டுமே கட்டுப்பாடுடன் இருப்பர். புரட்டாசி என்றால், ஒட்டுமொத்த ஊரே, அசைவத்தை ஒதுக்கி, சைவத்துக்கு மாறி விடும். பெரியவர்கள் முதல், சிறுவர் வரை, ஆண், பெண் பேதமின்றி, நெற்றியில் திருமண் இட்டு, பெருமாளையே மாதம் முழுதும் சரணடைந்து நிற்பர்.
ரம்மியமான மாதம்!
புரட்டாசி மாதம் முழுதும், சூரியன் கன்னி ராசியில் இருப்பதால், இந்த மாதத்திற்கு கன்யா மாதம் என்றும், தெலுங்கில் பாத்ரபத மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு கடவுளுக்கும், சில நாட்களும், சில நட்சத்திரங்களும் விசேஷமானவை. சிவனுக்கு திங்கட்கிழமையும், திருவாதிரையும்; முருகனுக்கு செவ்வாய்க்கிழமை, கிருத்திகை மற்றும் விசாகம்; அம்மனுக்கு வெள்ளிக் கிழமை, மூலம், பூரம் நட்சத்திரங்கள் போல, பெருமாளுக்கு சனிக்கிழமையும், ஸ்ரவணம் எனப்படும் திருவோண நட்சத்திரமும் மிகவும் உகந்தவை.
நட்சத்திரங்களில் சிவனுக்கு உரிய ஆதிரை எனும் திருவாதிரை, விஷ்ணுவிற்கு உரிய ஸ்ரவணமான திருவோணம் ஆகியவற்றுக்கு மட்டுமே, மரியாதையைக் குறிக்கும், திரு என்னும் அடைமொழி உண்டு. திருமலை வேங்கடவனுக்கு ஆண், பெண் மற்றும் வயது வித்தியாசமின்றி, முடி நேர்த்திக் கடன் செலுத்தும் பழக்கம் வெகு காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது.
ஒருவன் அன்புடனும், பக்தியுடனும் அளிக்கும், ஒரு இலையோ, ஒரு பூவோ, ஒரு பழமோ, நீரோ கூட, எனக்கு ஏற்புடையதே! என்று கண்ணன் கூறினானே... அது போல இறைவனுக்கு எதையுமே, நாம் பக்தியுடனும், நம்பிக்கையுடனும், அர்ப்பணிப்புடனும் சமர்ப்பித்தால், இறைவன் அதை ஏற்று, நமக்கு நலம் பயப்பான்!
வாசலில் வந்து நின்ற பெரியவர், நாங்கள் ஏழைகள் அல்ல; மகளுக்குத்திருமணமாகாமல் இருந்தது. புரட்டாசி சனி விரதமிருந்து, பிச்சை எடுத்து, தாயாரைத் தன் மார்பில் தாங்கும் அந்த சீனிவாசப் பெருமாளைத் தரிசனம் செய்ய வருவதாக வேண்டு... நடக்கும் என, என் மனைவி கனவில் ஒரு பெரியவர் சொன்னார். இப்போது புரிந்ததா... என்றார்.
வியப்படைந்தேன்!
வறுமை, நோய், குழந்தை இன்மை, மகளின் திருமணம், மகனுக்கு நல்ல வேலை இப்படி பல்வேறு மனத் துயர்கள், மனிதர்களுக்கு. எல்லாவற்றிற்கும் நம் முயற்சி இருந்தாலும், மனிதன் அடைக்கலம்அடைவது இறைவன் திருவடியே.
சங்கட ஹரணா... வேங்கட ரமணா... என, ரங்கபுர விஹாரா கிருதியில், முத்துசாமி தீக் ஷிதர் சொல்லி இருக்கிறார். சங்கடங்களைத் தீர்ப்பவனே கோவிந்தா... வேங்கடமலையில் இருப்பவனே கோவிந்தா... என்கிறார்! நம் சங்கடங்களைத் தீர்க்கும் எம்பெருமானுக்கு, குபேரன் செல்வம் அளித்த வரலாற்றை, அடுத்த வாரம் காண்போம்.
முனைவர். வி.மோகன்
உதவி இயக்குனர்
சி.பி.ராமசுவாமி அய்யர் இந்தியவியல் ஆய்வு மையம், சென்னை.
venmohan2005@yahoo.co.in