பதிவு செய்த நாள்
19
செப்
2020
02:09
அவிநாசி: போலீசாரின் அறிவுறுத்தலுக்கேற்ப, அவிநாசியில் உள்ள கோவில்களில், புரட்டாசி சனிக்கிழமை தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவிநாசி காவல் நிலைய எல்லைக்குட்பட்டு இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில், அவிநாசி கரிவரதராஜ பெருமாள் கோவில் மற்றும் வீர ஆஞ்சநேயர் திருக்கோவில், மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் திருக்கோவில், தாளக்கரை லட்சுமி நரசிம்மன் கோவில், கருவலூர் கருணாகர வெங்கட்ரமணா கோவில் ஆகியவை உள்ளன.
இக்கோவில்களில், புரட்டாசி சனிக்கிழமை பூஜை சிறப்பாக நடத்தப்படும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். இந்நிலையில், நேற்று காலை அவிநாசி டி.எஸ்.பி. பாஸ்கரன் முன்னிலையில், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் வெங்கடேஷ், கோவில் செயல் அலுவலர்கள் பங்கேற்ற அவசர ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து உதவி ஆணையர் வெங்கடேஷ் கூறியதாவது: கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், புரட்டாசி சனிக்கிழமையில் கோவிலுக்கு அதிகளவு பக்தர்கள் வருவர். அவர்களை கட்டுப்படுத்துவது சிரமமாக இருக்கும். அதேநேரம், கோவிலிலிருந்து தொற்றுப் பரவல் வந்து விடக்கூடாது என்பதற்காக, புரட்டாசி சனிக்கிழமை தரிசனத்தை ரத்து செய்ய போலீசார் அறிவுறுத்தலுக்கு ஏற்ப முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான சிறப்பு பஸ் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அவிநாசி ரோட்டோரத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில், 19ம் தேதி (நாளை), 26 மற்றும் அடுத்த மாதம், 10, 17 ஆகிய தேதிகளில், புரட்டாசி சனிக்கிழமை தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. பக்தர்கள், ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.