திருப்பதி: திருமலை திருப்பதியில் நடந்துவரும் பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் நாளான நேற்று இரவு 9 மணியளவில் மலையப்பசுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளினார். பிரம்மோற்சவ விழாவின் பிரதான விழாவாக கருதப்படுவது கருட சேவையாகும்.பெருமாள் தனக்கு பிடித்த கருட வாகனத்தில் எழுந்தருளினார். நேற்று மட்டும் மூலவருக்கு அணிவிக்கப்படும் மிகப்பெரிய காசு மாலை பச்சை மரகதக்கல் பதித்த பச்சை ஆரம் அணிந்து எழுந்தருளினார்.
முன்னதாக ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பெருமாளுக்கு பட்டு வஸ்திரத்தை வெள்ளித்தட்டில் வைத்து தலையில் சுமந்து கொண்டுவந்து வழங்கினார்.அவருடன் ஆந்திரா மாநில அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர்.முதல்வர் வந்ததன் காரணமாக அவர் மூலமாக 2021ம் ஆண்டிற்கான கோவில் காலண்டர் மற்றும் டைரிகள் வெளியிடப்பட்டது. இந்த காலண்டர் மற்றும் டைரிகள் வருகின்ற 28 ம்தேதிக்கு மேல் திருமலை திருப்பதி தேவஸ்தான ஸ்டால்களில் விலைக்கு கிடைக்கும். காலையில் மோகினி அவதாரத்தில் மலையப்பசுவாமி தந்த பல்லக்கில் வந்தருளினார் அப்போது அவர் ஸ்ரீ வில்லிபுத்துாரில் இருந்து கொண்டு சென்ற ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிந்து கையில் கிளியை சுமந்தபடி வந்தார் உடன் இன்னோரு தந்த பல்லக்கில் கிருஷ்ணர் சர்வ அலங்காரத்துடன் காட்சிதந்தார். -எல்.முருகராஜ்.