பதிவு செய்த நாள்
26
செப்
2020
01:09
மாலை தேநீர் பருகிக் கொண்டிருந்த வேளை, நண்பன் கண்ணனின் அலைபேசி அழைப்பு. நாளை காலை, 11:00 மணிக்கு, என் மகளின் திருமண பத்திரிகையோடு வருகிறேன். வீட்டிலிரு எனத் துண்டித்தான்.
அந்த மகிழ்வான தருணத்தில், மனைவி கமலா அருகில் அமர்ந்தாள். பார்த்தாயா கமலா, கண்ணனுடைய இறை நம்பிக்கையும், பக்தியும் வீண் போகவில்லை என்றேன்.
கலௌ வேங்கட நாயக என்று ஒரு முதுமொழி உள்ளது. அந்த ஏழுமலையானிடம் முழுமையான பக்தியும், முயற்சியும் இருந்தால், அவன் கைவிட மாட்டான் என, நண்பனிடம் சொன்னேன். அதை ஏற்று, புரட்டாசி மாதம் சனிக்கிழமை தோறும், அவன் விரதம் இருந்து, ஸர்வ மங்களங்களையும் அளித்து, நித்திய கல்யாணம் காணும் சீனிவாசப் பெருமாளை, பக்தியுடன் வேண்டி வந்தனர். அதற்கு பலன் கிடைத்துவிட்டது.நல்ல இடம் கிடைத்தும், அவன் பணத்திற்கு கஷ்டப்பட்டான்.
துாய்மையான பக்தி: அப்போது, நல்ல இடம் அமைவது கடினம். அந்த சீனிவாசப் பெருமானே, குபேரனிடம் கடன் பத்திரம் எழுதிக் கொடுத்து, வட்டிக்கு கடன் வாங்கி கல்யாணம் பண்ணிக் கொள்ளவில்லையா? ஏற்பாடுகள் செய்; வழி பிறக்கும் என, ஊக்கப்படுத்தினேன்.அந்த கதையை எனக்குக் கொஞ்சம் சொல்லுங்களேன் என்றாள் கமலா.வீட்டை கட்டிப் பார்; கல்யாணம் செய்து பார் என்பது பழமொழி. இது, கடவுளுக்கும் பொருந்தும். ஆம்... சீனிவாசரே, குபேரனிடம் கடன் வாங்கித் தான், பத்மாவதி தாயாரை திருமணம் செய்து கொண்டார்.
அதாவது, மகாவிஷ்ணு ஸ்ரீவைகுண்டத்தை விட்டு இறங்கி, ராம அவதாரத்தில் வேதவதி என்பவளுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதற்காக, சீனிவாசனாக பூலோக வைகுண்டமான, வேங்கட மலைக்கு வந்து தவமிருந்து, ஆகாச ராஜனின் மகளாக வந்திருக்கும் அலர்மேல் மங்கையாம் பத்மாவதித் தாயாரை மணம் செய்து கொண்ட வைபவத்தை, மனைவிக்கு கூறத் துவங்கினேன்.
இங்கு ஒன்றை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். எந்த இறைவனும், எங்களுக்கு இவற்றையெல்லாம் நீங்கள் செய்யுங்கள் என்று யாரையும் கட்டாயப் படுத்துவது இல்லை. இறைவனுக்குத் தேவை அன்பு நிறைந்த துாய்மையான பக்தியே. நாம் நம் மகிழ்ச்சிக்காகவும், மன நிறைவிற்காகவும், கடவுளர்களுக்கு பூஜைகள், உற்சவங்கள், திருவிழாக்கள் நடத்தி மகிழ்கிறோம். மேலும், சாமான்ய மக்களாகிய நமக்கு, பல்வேறு தேவைகள் மற்றும் விருப்பங்கள்.
இறைவனிடத்தில் மனமுருகி பிரார்த்தனை செய்து, நம் கோரிக்கைகளை வைத்தால் போதும்; ஆண்டவன் அடியார்களுக்கு அருள் புரிவதற்குக் காத்துக் கொண்டிருக்கிறான். ஒரு யானை, ஆதி மூலமே... என்று அழைத்ததும், கருடன்மீதேறி கடுகி வரவில்லையா அந்த திருமால்! அதுபோல, கடன் வாங்கி கல்யாணம் செய்து கொண்டார் சீனிவாசன் என்றவுடன், தவறான அர்த்தம் செய்து கொள்ளக் கூடாது.
மனித உருவில் அவதரித்தால், அதற்கான குணநலன்களுடன் இருப்பதுதானே இயற்கை. அதற்காகவே, சீனிவாசப் பெருமான் தன் திருமண செலவிற்கு குபேரனிடம் பணம் வாங்கினான். கதையை மேலும் சொல்கிறேன் கேள்...ஒரு சமயம் முனிவர்கள் சிலர் சேர்ந்து, வேள்வியில் ஈடுபட்டனர். அந்த வேள்வியில், அதன் நைவேத்தியமான அல்லத பலனான ஹவிர்பாகத்தை யாருக்குத் தருவது என்பதில் ஒரு சந்தேகம் எழவே, அதைப் போக்கிக் கொள்ள ப்ருகு முனிவரின் உதவியை நாடினர்.
அவர் பாற்கடல் சென்று, காக்கும் கடவுளாம் நாராயணனை சந்தித்தார். அப்போது, திருமால், திருமகள் இலக்குமியின் அண்மையில் இருந்ததால், அவரைக் கண்டுகொள்ளவில்லை.
கோபம் கொண்ட முனிவர், திருமாலின் திருமார்பில் எட்டி உதைக்க, மகாவிஷ்ணு எதிர் கோபம் கொள்ளாமல், அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். ஆயினும், இந்த நிகழ்வு திருமகளுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது.
மகாவிஷ்ணுவிடம், நான் கொலு வீற்றிருக்கும் இடம், உமது திருமார்பு. அதை அவமதித்த ஒருவனுக்கு, நீர் ஆதரவு காட்டியது சரியன்று. அதை எனக்கு ஏற்பட்ட அவமானமாகவும், களங்கமாகவும் கருதுகிறேன்.அந்தக் களங்கத்தைப் போக்கிக் கொள்ள, நான் பூவுலகம் சென்று, கரவீரபுரம் என்ற இடத்தை அடைந்து, தவம் செய்யப் போகிறேன் என்று கூறினாள். திருமால் எவ்வளவு சமாதானம் சொல்லியும், கேளாமல் திருமகள் பூவுலகம் வந்தடைந்தாள்; தவத்தையும் தொடங்கினாள்.
இதனிடையில், வேதவதிக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்காக, எம்பெருமானும் சீனிவாசனாக அவதரித்து, கரவீரபுரத்திற்கு அருகில்உள்ள வேங்கட மலையின் மீது, புஷ்கரணி என்று அழைக்கப்படும், திருக்குளத்தின் கரையிலே ஏற்கனவே எழுந்தருளியிருக்கும் வராஹமூர்த்தியிடம் அனுமதி பெற்று, அருகில் இருந்த புற்று ஒன்றை அடைந்து, தவம் செய்யலானார். அங்கு வகுளமாலிகா என்னும் பெருமாட்டி, அவரை தன்னுடைய பிள்ளையைப் போல் பாவித்து, அன்பு காட்டினாள். இந்த வகுளமாலிகா, முற்பிறவியில் யசோதை ஆவாள்.
கலியுக தர்மம்: அதே காலகட்டத்தில், திருவேங்கடத்திற்கு தென்கிழக்கில் அமைந்திருந்த தொண்டை மண்டலத்தை, சந்திர வம்சத்தைச் சேர்ந்த ஆகாசராஜன் என்னும் அரசர் ஆண்டு வந்தார். அவருடைய பட்டத்து அரசி தாரிணி ஆவார். அரச தம்பதியருக்கு நீண்ட நாட்கள் குழந்தை பாக்கியம் இல்லாது போகவே கவலை வாட்டியது. தன் குல குருவான சுக முனிவரின் அறிவுரையை ஏற்று, யாகத்திற்கு ஏற்பாடுகள் செய்தார். யாகத்திற்கான நிலத்தை சம்பிரதாயத்திற்காக, அரசன் பொற் கலப்பையினால் தோண்ட முற்பட, தங்கத்தினால் ஆன பெட்டி ஒன்று கிடைக்கப் பெற்றது. உள்ளே திறந்து பார்க்கும்போது, ஆயிரம் தங்க இதழ்களால் ஆன மலர் மீது தெய்வாம்சம் பொருந்திய அழகிய பெண் மகவு ஒன்று காணப்பட்டது.
யாகத்தை நிறைவு செய்த அரசன், அக்குழந்தைக்கு பத்மாவதி என்று பெயரிட்டு, பேரானந்தத்துடன் வளர்த்து வந்தார். ஒரு நாள் வேட்டைக்கு வந்த சீனிவாசன் பத்மாவதியைப் பார்த்து, அவளை வேதவதி என்று அறிந்து மணமுடிக்க தீர்மானம் செய்து கொண்டார். பெண் கேட்டு, வகுளமாலிகையை அனுப்பினார்; திருமணம் நிச்சயம் ஆயிற்று.சீனிவாசர், பத்மாவதி தாயாரை திருமணம் செய்து கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று கொண்டிருந்தன.
இந்த ஜகத்தையே சிருஷ்டி செய்யும் பெருமாளின் திருக்கல்யாணம் அல்லவா!
எங்கும் மங்கல வாத்தியங்கள் ஒலிக்க, தேவர்கள் இன்னிசை எழுப்ப,தேவ துந்துபிகள் நாதம் முழங்க, தவசியர் திருமாலின் திருநாமத்தை மூவுலகும் கேட்டு மகிழும் வண்ணம் பாடிப்பரவ, சிவபெருமான், நான்முகன், இந்திரன் மற்றும் அனைவரும் வருகை புரிந்தனர். அனைவரு ம் தெய்வ திருப்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.திருமணச் செலவிற்கு தேவையான பொன்னும், பொருளும் குபேரனிடமிருந்து பெறும் பொருட்டு, அவரின் உதவியை நாடி, குபேரா! எனக்கும் ஆகாசராஜனின் குமாரத்தி பத்மாவதிக்கும் நடக்கும் திருமணத்திற்கு, உன்னுடைய உதவி தேவைப்படுகிறது என்று மொழிந்தார்.
அதைக் கேட்டு துடித்த குபேரன், பரந்தாமா... என்னிடம் நீங்கள் கேட்பது தகுமோ... இது முறையோ... என்று மெய்யுருக வேண்டினான். திருமால் திருமுகம் மலர, குபேரா! நான் சீனிவாசனாக அவதாரம் எடுத்திருப்பதால், இப்படி நடக்க வேண்டும் என்பது கலியுக தர்மம். அதை நான் மாற்ற முடியாது. நீ எனக்கு, ஒரு கோடியே பதினான்கு லட்சம் தங்க காசுகளை கடனாக தர வேண்டும். அதற்கு வட்டியாக ஒரு லட்சம் பெற்றுக்கொள். கலியுகத்தின் முடிவில் அசலை திருப்பி கொடுத்து விடுகிறேன். நான் முறைப்படி கடன் பத்திரம் ஒன்றும் எழுதி கொடுத்து விடுகிறேன் என்று கூற, குபேரனும், பகவானிடம் பத்திரத்தை பெற்று கொண்டு, கடன் கொடுக்க உடன்பட்டார்.
சிவபெருமானும், நான்முகனும் சாட்சி கையொப்பம் இட, அவர்கள் இருந்த இடத்திலிருந்த அரச மரத்தின் சாட்சியுடன் கையொப்பம் இட்டனர். திருமால், குபேரனிடம் பத்திரத்தை ஒப்படைத்து, ஒரு கோடியே பதினான்கு லட்சம் ராம முதிரை பொறித்த தங்க நாணயங்களை பெற்றுக் கொண்டார்.திருமணம் கோலாகலமாக நடைப்பெற்று நாராயணணும், பத்மாவதியும் அவர்களுக்காக கட்டிய ஆனந்த நிலையத்தில் வாசம் செய்து வந்தனர். பெருமாளும், ஆகாச ராஜனின் வேண்டுகோளுக்கு இணங்கி, அவதாரம் முடிந்து, வானுலகம் செல்லாமல் திருமலையிலே அர்ச்சாமூர்த்தியாக எழுந்தருளி, நமக்கு அருள் பாலிக்கிறார்.
வளமுடன் வாழவைப்பேன்: குபேரனிடம் தான் கடன்பட்டதையும், அதற்கான வட்டியையும் நினைத்து, கடன் பட்டார் நெஞ்சம் கலங்குவது போல் நாரயணண் மிகவும் கவலைப்பட்டார். செல்வத் திருமகளாகிய லஷ்மி தம்மிடம் வந்து சேர்த்தால் தான் குபேரனின் கடன் தீர்க்க முடியும் என்று எண்ணினார். விஷ்ணுவை பிரிந்து சென்ற மஹாலஷ்மி தவம் இருக்கும் இடத்திற்கு சீனிவாசன் சென்று தன் கவலையை எடுத்துரைத்தார். அதற்கு லஷ்மிதேவியானவள், தங்களை பக்தியுடனும், நம்பிக்கையுடனும் நாடி வரும் பக்தர்களின் குறைகளை தீர்த்து, அவர்களுக்கு வேண்டிய வரங்களை அருளி, கலியுக தெய்வமாக இருந்து, தாங்கள் அவர்களை காப்பீர்கள்.தங்களின் திரு மார்பில் இருக்கும் நான், அவர்களுக்கு தேவையான ஐஸ்வர்யத்தையும், செல்வத்தையும் அளித்து, வளமுடன் வாழவைப்பேன். பக்தர்கள் தங்கள் மேல் கொண்ட உண்மையான அன்பால், தங்களின் காணிக்கைகளை மனமுவந்து செலுத்துவர் என்று கூறினாள்.
ஸ்ரீனிவாசன் தான் குபேரனிடம் மட்டும் கடன் படவில்லை, என்னை கோவிந்தா என்று ஒரு முறை கூப்பிட்டாலே, நான் கடன் பட்டவன் ஆகிறேன். இன்னொரு முறை அழைத்தால் கடனுக்கு வட்டி கொடுப்பேன், திரும்பவும் அழைத்தால் வட்டிக்கு வட்டி உண்டு! என்று கூறுகிறார். வட்டி காசுல வாடா என்ற பெயரும், ஸ்ரீனிவாச பெருமாளுக்கு உண்டு.
இதனால் தான், திருவேங்கடவனுக்கு உண்டியலில் பணம் செலுத்துதல், திருக்கல்யாணம் செய்தல் ஆகியவை நடைமுறையில் உள்ளன. கலியுக வரதன், அந்த வேங்கடவனை வழிபட்டால், அனைத்து நன்மைகளும் நம்மை வந்து அடையும்; இது திண்ணம் என்று கூறி கதையை முடித்தேன்
- முனைவர். வி. மோகன், உதவி இயக்குனர்,சி.பி.ராமசுவாமி அய்யர் இந்தியவியல் ஆய்வு மையம்
சென்னை.