திருச்சுழி : திருச்சுழி அருகே சென்னிலைக்குடி கண்மாய் கரை அய்யனார் கோயிலில் பாண்டியர் காலத்தை சேர்ந்த அபூர்வ அய்யனார் சிலை உள்ளதாக பாண்டிய நாட்டு பண்பாடு மைய வரலாற்று ஆய்வாளர் ஸ்ரீதர் கூறினார். அவர் கூறியதாவது: 7 ம் நுாற்றாண்டை சேர்ந்த இச்சிலையின் தலையை அடர்த்தியான ஜடாபாரம் அலங்கரிக்கிறது. இரு காதுகளிலும் வட்ட வடிவ பத்ர குண்டலம் அணிந்து, எடுப்பான நாசி, தடித்த உதடுகளை உடைய திருவாய், அகன்ற தோளுடன் காட்சி அளிக்கிறது. இரு கைகள் மேல் புஜங்களில் உருளை வடிவுடைய தோள் வளைகளும், முன்னங் கைகளில் கை வளைகளும் உள்ளன. மார்பு சற்றே விரிந்து கம்பீர கோலத்தில் சிலை உள்ளது. அய்யனார் வலது கையில் காணப்படும் செண்டாயுதம் இதில் இல்லை. மார்பில் முன்புரி நுால் உள்ளது. வலது காலை மடித்தும், இடது கையை இடது காலின் நீட்டியும் உட்குதிகாசன கோலத்தில் அமர்ந்துள்ளார்.வலது கரத்தை ஏந்திய நிலையில் வைத்திருப்பது அபூர்வம்.வேறு எங்கும் காணப்படாத இச்சிலை முற்கால பாண்டியர் காலத்தை சேர்ந்தாகும், என்றார்.