பதிவு செய்த நாள்
04
அக்
2020
03:10
மதுரை:கல்லுாரி மாணவர் ஒருவர், தமிழில் எழுதிய ஹரிவராசனம் பாடலை, இயக்குனர் கங்கை அமரன் வெளியிட்டு பாராட்டினார். மாணவர் சதீஷ் கூறியதாவது:தஞ்சாவூரைச் சேர்ந்த நான், பி.காம்., 3ம் ஆண்டு படிக்கிறேன். திருவையாறு பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் குருக்களாக உள்ளேன்.அய்யனாரும், அய்யப்பனும் ஒன்று என்ற ஆராய்ச்சியை, இரண்டாண்டுகளாக செய்து வருகிறேன். எனவே, ஹரிவராசனம் பாடலை தமிழில் கொண்டு வர முயற்சி செய்தேன்.
கடந்த, 1975ல் மலையாள இசையமைப்பாளர் தேவராஜன் இசையில், பாடகர் ஏசுதாஸ் குரலில் இப்போதுள்ள ஹரிவராசனம் உருவானது. இப்பாடலை, தமிழில் கொண்டு வந்து, அய்யப்பன் புகழை இன்னும் பரப்ப வேண்டும் என்பதற்காக முயற்சி செய்தேன்.கோவை மகா சாஸ்த்ரூ சேவா சங்கத் தலைவர் அரவிந்த் சுப்ரமணியனிடம் பாடலுக்கு விளக்கம் சரிதானா என்பதை உறுதி செய்தேன்.பாடல் தயாரானதும், அய்யப்பன் பாடல்களை பாடும் வீரமணி ராஜுவிடம் கொடுத்தேன். அவர் பணம் வாங்காமலே பாடினார். சமஸ்கிருத ஹரிவராசனம், எட்டு நிமிட பாடல். அதில், இசை அதிகம் இருக்காது. ஆர்.கே.சுந்தர் இசையில், 12 நிமிட பாடலாக, தமிழில் தயாரித்துள்ளேன். தஞ்சாவூரில் நடந்த வெளியீட்டு விழாவில், இயக்குனர் கங்கை அமரன் வெளியிட்டு பாராட்டியது, பெருமையான விஷயம்.இவ்வாறு, அவர் கூறினார்.