பதிவு செய்த நாள்
11
அக்
2020
04:10
ஈரோடு: புரட்டாசி கடைசி சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர். புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையான நேற்று, ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், நீண்ட வரிசையில் காத்திருந்து, பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதிகாலை, 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, திருப்பள்ளி எழுச்சி, திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், மஹா தீபாராதனை நடந்தது. மூலவர், ஆதிசேஷன் மீது, அனந்த சயன கோலத்திலும், உற்சவர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கல்யாண மண்டபத்தில், லட்சுமி நாராயணராக தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டது.
* பவானியை அடுத்த பெருமாள் மலையில், மங்களகிரி பெருமாள், திருப்பதி வெங்கடஜலபதி அலங்காரத்தில், காட்சியளித்தார். இதேபோல் அந்தியூர் பேட்டை பெருமாள், கோட்டை வரதராஜ பெருமாள் கோவில்களில், புரட்டாசி கடைசி சனி வழிபாடு, உற்சாகத்துடன் நடந்தது.
* புன்செய்புளியம்பட்டி அருகே, கீழ்முடுதுறை திம்மராயப்பெருமாள் கோவிலில், அதிகாலை மகா அபிஷேகம், திருமஞ்சனம் நடந்தது. காலையில் சிறப்பு அலங்கார பூஜையில், திம்மராயப் பெருமாள் தங்க காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்த ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றி, பக்தர்கள் வழிபட்டனர். சர்ப்ப வாகனத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் எழுந்தருளி, கோவில் உலா நடந்தது. தாசர்களுக்கு, அரிசி படி வழங்கி, பக்தர்கள், சிறப்பு வழிபாடு செய்தனர்.