போடி: தேனி மாவட்டம் போடி சி.பி.ஏ. கல்லுாரி தொல்பொருள் ஆராய்ச்சி பேராசிரியர்கள் மாணவர்கள் வருஷநாடு அருகே கடமலைக்குண்டில் கி.பி.18ம் நுாற்றாண்டை சார்ந்த புலிகுத்திப்பட்டான் என்ற நடுகல்லை கண்டு பிடித்துள்ளனர். இக்கல்லுாரியின் முதல்வர் சிவக்குமார் தலைமையில் பேராசிரியர் மாணிக்கராஜ், ஆய்வு மாணவர்கள் ராம்குமார், கோபி, கண்மணி முத்து, கருப்பையா, சதீஷ் ஆகியோர் கல்வெட்டுகள் கற்கள் மண்ணில் புதைந்துள்ள கற்கால பொருட்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாணிக்கராஜ் கூறியதாவது: கடமலைகுண்டு பகுதியை சேர்ந்த ஞானசேகரன் என்பவரது தகவலின்படி அப்பகுதியில் வரலாற்று தேடல் குழுவினர் ஆய்வு மேற்கொண்டதில் கி.பி.18 ம் நுாற்றாண்டை சார்ந்த புலிகுத்திப்பட்டான் என்ற நடுகல் கண்டறியப்பட்டுள்ளது. வருஷநாட்டை சுற்றியுள்ள ஊர்களில் பிற்கால பாண்டியர்கள் காலத்தில் அழநாடு பிரிவின் கீழ் கடமலைகுண்டு இருந்தது. மலையும் மலை சார்ந்த இடமாக உள்ளதால் காட்டு மாடு, விலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இப்பகுதி மக்கள் ஆடு, மாடுகளை மேய்ப்பதையே முக்கிய தொழிலாக கொண்டிருந்த காலத்தில் புலி அவற்றை கொன்று வந்துள்ளது. புலியால் ஏற்படும் உயிர் பலிகளை தடுக்க வீரன் ஒருவன் அதனுடன் சண்டையிட்டு புலியை கொன்று தானும் வீர மரணம் அடைந்துள்ளான். அந்த வீரனின் உயிர் தியாகத்தையும் வீரத்தையும் போற்றி நினைவு கூறும் படியாக இந்த நடுகல் அமைந்துள்ளது. இதில் வீரன் தனது வலது காலை வலப்பக்கமாக முன்வைத்து இடக்காலை பின்பக்கமாக ஊன்றி நிற்கும் ஆசனமாக ஆலிடாசனத்தில் நின்றுள்ளான். தன்னை நோக்கி பாய்ந்து தாக்கும் புலியின் வாயில் வீரன் தனது இரு கைகளால் அழுத்தி வேல் கம்பால் குத்துவது போன்ற சண்டைக் காட்சியை அழகாக சிற்பமாக செதுக்கியுள்ளனர். கொண்டையும் காதில் குண்டலங்களுடன் வீரனது இடது பக்க இடையில் வாள் ஒன்றும் சொருகப்பட்டிருக்கிறது என்றார்.